கடவுள் வாழ்த்து

Posted in , , , Print Friendly and PDF


குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து.

குறள் வரிசை:  1  2  3  4  5  6  7  8  9  10

குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
மு.வரதராசனார் உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
பரிமேலழகர் உரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க. 
விளக்கம்: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒளிவடிவான 'அகர'மாகிய முதலை உடையன. அதுபோல, உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது.
Transliteration
agara mudhala ezhuthellaam aadhi
bhagavan mudhatRe ulagu

Translation:
A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.
Explanation:
As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first
.

குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
மு.வரதராசனார் உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
பரிமேலழகர் உரை:
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:
மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால். தூய அறிவினன் - மெய்யுணர்வினன் - ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும்.
Transliteration:
katRadhanaal aaya payanenkol vaalaRivan
natRaal thozhaa-ar enin.
Translation:
No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's'feet adore.
Explanation:
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?.

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
மு.வரதராசனார் உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
பரிமேலழகர் உரை:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்).
மணக்குடவர் உரை:
மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உள்ளக் கமலத்தில் - மனத்தில் - சென்றிருப்பவனான இறைவனுடைய மாட்சியமைப்பட்ட அடிகளை எப்போதும் நினைப்பவர்கள் , உலகில் அழிவின்றி வாழ்வார்கள்.
Transliteration:
malarmisai aeginaan maaNadi saerndhaar
nilamisai needu-vaazh vaar
Translation:
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.
Explanation:
They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
மு.வரதராசனார் உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
பரிமேலழகர் உரை:
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.).
மணக்குடவர் உரை:
இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
விருப்பும் வெறுப்பும் இல்லாவனான இறைவனின் அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பமே உண்டாகாது.
Transliteration:
vaeNdudhal vaeNdaamai ilaanadi saerndhaarkku
yaaNdum idumbai ila
.
Translation:
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.
Explanation:
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.


குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
Transliteration:
iruLser iruvinaiyum saeraa iRaivan
poruLser pugazh-purindhaar maattu
.
Translation:
The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well.
Explanation:
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
மு.வரதராசனார் உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
சாலமன் பாப்பையா உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றர் நெடுங்காலம் வாழ்வார்.
பரிமேலழகர் உரை:
பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது).
மணக்குடவர் உரை:
மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?.இது சாவில்லையென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து பொறிகளின் வழியாக வரும் ஆசைகளை அறுத்தவனுடைய மெய்யான ஒழுக்க வழியில் நின்றவர்கள், எக்காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்.
Translation:
Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.
Explanation:
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
மு.வரதராசனார் உரை:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.
பரிமேலழகர் உரை:
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.).
மணக்குடவர் உரை:
தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லரிது. வீடுபெறலாவது அவலக்கவலைக் கையாற்றினீங்கிப் புண்ணிய பாவமென்னுமிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத்தலுமில்லாத தொரு தன்மையை யெய்துதல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார். அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலின்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தனக்கு ஈதாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது.
Translation:
Unless His foot, 'to Whom none can compare,gain, 'This hard for mind to find relief from anxious pain.
Explanation:
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
மு.வரதராசனார் உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.
பரிமேலழகர் உரை:
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.).
மணக்குடவர் உரை:
அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அறக்கடலாகிய இறைவனுடைய அடிகளாகிய தெய்வத்தினைச் சார்ந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்களுக்குப் பொருள், இன்பம் ஆகிய கடல்களை நீந்திக் கடத்தல் முடியாததாகும்.
Translation:
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard
the further bank of being's changeful sea to attain.
Explanation:
None can swim the sea of vice, but those who are united to the feet of that
gracious Being who is a sea of virtue.

குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
மு.வரதராசனார் உரை:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
சாலமன் பாப்பையா உரை:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
பரிமேலழகர் உரை:
கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைப்  போல அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுத்தலுடையான் அல்லவாம்.
Translation:
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead.
Explanation:
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
மு.வரதராசனார் உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
பரிமேலழகர் உரை:
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.).
மணக்குடவர் உரை:
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இறைவன் அடிகள் என்னும் தொப்பத்தைச் சேர்ந்தவர்கள், பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் (நினைத்திருக்காதவர்கள்) நீந்த மாட்டார்கள்; அதனுள் அழுந்துவார்கள்.
Translation:
They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach
the shore of being's mighty main.
Explanation:
None can swim the great sea of births but those who are united to the
feet of God.

This entry was posted at Monday, January 05, 2009 and is filed under , , , . You can follow any responses to this entry through the comments feed .

80 comments

Anonymous  

அருமையான தொண்டு! வாழ்க நும் பணி

March 11, 2012 at 1:54 AM

தலை வணங்குகிறான் இந்த தமிழ்ச்செல்வன்

March 11, 2012 at 7:38 PM

உங்கள் பணி சிறக்க வாழுதுகள்.

March 12, 2012 at 11:20 PM

This is superb service...Long live

April 27, 2012 at 3:52 PM
Anonymous  

excellent work.Can you arrange for a print form so that this treasure is available offline.

Kumar Subramanian

May 21, 2012 at 8:43 AM
BALA MURUGAN  

hi this is good job. this r use
full in all pepoles. ALL IS WILL...........

June 7, 2012 at 2:33 PM

This is very good initiative.

Vaazhga nee emmaan !!

June 18, 2012 at 10:51 AM

kindly add the explanation of Dr. Deivanayagam on thirukkural which has different view thus many will get benefited

July 1, 2012 at 5:00 AM
Anonymous  

Thank u very much for this wonderful service to thirukural

July 30, 2012 at 1:19 PM

அதிகார விளக்கம்!

கடவுள் உண்டு அது இந்த உலகத்திற்கு துவக்கமாக உள்ளது. அதை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துக் கொள்ளாமல் படிப்பதால் எந்த பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் தேவை அற்றவர் என்ற பாகுபாடிகளை கடந்த அவரே குரு. அறியாமை உண்டாக்கும் இரு வினைகளை கடந்தவனே இறைமையை புரிந்து புகழை அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று வாழ்பவன் சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது உபதேசப் பொருளை அடையாமல் மனக்கவலை மாற்றுவது இயலாது. அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால் பிறவி துன்பமும் போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணக்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலை கடக்க இறைவனின் துணை அவசியம்.

August 2, 2012 at 10:36 PM

Cool.. This is awesome attempt!

August 23, 2012 at 3:00 PM
Sathish  

I really admired with these lines.

September 8, 2012 at 2:58 AM
sattur Mani  

Appreciate your work. Also Sivayogi Sivakumar. Could you summarize every chapter, please. Could the chapter summary be included at the end of every chapter.

December 30, 2012 at 9:14 AM
Anonymous  

I THINK I WAS ENJOYED YOUR WORS AND THE SENTENCES THANK FOR YOU TO GIVING THIS ACTIVITY

February 2, 2013 at 11:29 AM
sudhakar - dsignstudio  

அருமையான தொண்டு! வாழ்க நும் பணி

This is superb service...Long live

excellent work

hi this is good job. this r use
full in all pepoles. ALL IS WILL...........This is very good initiative.

Vaazhga nee emmaan !!

Thank u very much for this wonderful service to thirukural

Cool.. This is awesome attempt!

I really admired with these lines.

veru enna solla ellam sollivittargale.... adhanal en pangukku naanum parappukiren.

March 29, 2013 at 2:33 PM
Vadivelan K  

Thanks Team.

April 3, 2013 at 7:32 AM

அரும்பெரும் தமிழ் தொண்டு.இத்துடன் ஹிந்தியும் சேர்க்கலாமே.செய்நன்றி அறிதல் என் ஹிந்தி மொழிபெயர்ப்பு. விரும்பினால்...
तिरुवल्लुवर का तिरुक्कुरल

१.
कृतज्ञता ज्ञापन
१. जब हमें जरूरत होती है ,तब अचानक
कोई मदद करें तो उससे मिलनेवाला फल बेजोड़ है.उसकी तुलना आकाश और भूमि के
साथ भी नहीं कर सकते .
2..
समय पर की हुई मदद ,छोटी होने पर भी
जरूरत के वक्त करने से ,वह मदद संसार से बड़ी है.
3.
जो निष्काम मदद करते हैं ,वह मदद इस संसार से बहुत बड़ी है.
4.
जो कृतज्ञ है,वे तिल
बराबर की हुई मदद को भी ताड़- सम बड़ा मानेंगे .
5.
कोई मदद करें तो उसके परिमाण पर ध्यान न देकर ,उसके गुण के आधार पर
मूल्यांकन करना चाहिए
६.
सज्जनों की दोस्ती को कभी छोड़ना नहीं चाहिए,.उनकी मित्रता को
भूलना भी ठीक नहीं है. .वैसे ही कष्ट के समय हमारे साथ जो
रहे ,उनका संग तोड़ना नहीं चाहिए.
7.
किसी एक की सच्ची और पवित्र दोस्ती को हमेशा हर घडी
सोच -सोचकर बहुत ही हर्ष मनाना चाहिए.
8.
जिसने हमारी मदद की है,उसकी याद हमेशा रखनी चाहिए. उसे
कभी भूलना नहीं चाहिए.किसीने हमारी बुराई की तो उसको
तुरंत भूलना चाहिए.वही श्रेष्ठ गुण है .
9
हमको किसीने कई बुराईयाँ करने पर भी उसकी की हुई छोटी सी भलाई की याद करने पर उसके अत्याचारों को हम भूल जायेंगे
10.
सभी प्रकार की भलाइयों को नाश करने पर भी पाप से बच सकते
है.लेकिन मदद भूलकर कृतघ्न जो होते हैं ,उस पाप का कोई
प्रायश्चित नहीं है..

May 9, 2013 at 12:16 PM
R.Vijayaraj  

Good Job! Best Wishes!!
R.Vijayaraj

May 11, 2013 at 1:40 PM

அன்பு நண்பரே தங்களது தமிழ்பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய பெயர் மற்றும் பிற விவரங்கள் R.Venkatachalam. Former professor of psychology, Bharathiar university, Coimbatore.

நான் சென்ற ஆண்டு திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் - ஓர் உளவியல் பார்வை என்ற நூலையும் இந்த ஆண்டு வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு என்ற நூலையும் எழுதி வெளியிட்டு உள்ளேன். ஆங்கிலத்தில் Thirukkural Translation Explanation - A Life Skill Coaching Approach , Thirukkural Translation Gu Pope revisited என்ற நூலையும் எழுதி வெளியிடுவதற்காகக் காத்திருக்கிறேன். பொதுவாக இதுகாறும் திருக்குறள் சரியான முறையில் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது என்னுடைய கருத்து. தற்போது உள்ள உரைகள் வள்ளுவத்தின் ஆழத்தையும் விரிவையும் முழுமையாக வெளிக்கொணரவில்லை என நான் கருதுகிறேன். நன்றி வணக்கம்

May 16, 2013 at 2:10 AM

http://www.youtube.com/watch?v=ufvA_VNj--M

indha kurumbpadam nijam agamal thavirpom

July 25, 2013 at 12:31 AM

Hi My name is Kulanthaivel
From Mumbai. Wanted to learn thirukkural in details. suggest some website to know the meaning of tamil
I dont even know many words in thirukkural. I started learning from today

August 8, 2013 at 12:59 PM
Anonymous  

learnt few adhikarams of thirukkural in school. over the years forgot many. still remember a few due to the fantastic teachers i had in school. always wanted to learn all the kural and their meaning. found your site today. fantastic job. thank you so much. keep up the good work.

August 14, 2013 at 2:37 AM
GANESH  


NICE ATTEMPT OF HINDI TRANSLATION MR SETHURAMAN ANADAKRISHNAN.TRY TO DO IT FOR ALL KURALS.I CAN COLLABORATE WITH YOU.GANESH

September 13, 2013 at 2:06 PM

Wonderful and commendable contribution. Best wishes. Paaraatta pada vendiya oru siranda pani. Nal vaazhthukkal.

September 28, 2013 at 12:58 AM

Narpanikku Vazhthukkal!!
Anbudan,
Thanga. Muruegsan

October 25, 2013 at 10:51 AM
Anonymous  

words can not define your work.

October 27, 2013 at 2:02 AM
Anonymous  

unkalathu tamil pattrukkum muyarchikkum nan thalai vanankukiren

December 19, 2013 at 5:43 AM
S.Sivasothy  

உங்கள் இச்சிறந்த பணி மென்மேலும் சிறக்க எம் வாழ்த்துக்கள்
ஒட்டவா முத்தமிழ் கலா மண்றம்-கனடா

December 30, 2013 at 10:15 AM

அருமையான தொண்டு!

January 21, 2014 at 7:02 AM

தங்களின் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை .நீடூடி வாழ்க என வாழ்த்தும் பாலாஜி

February 26, 2014 at 6:51 AM
சிவக்குமார்  

அருமையான தளம். தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.

March 13, 2014 at 8:34 AM
Anonymous  

Thanks a lot for this wonderful service that'll make a difference to those who want to learn and follow thirukkural. Lavanya

March 14, 2014 at 7:48 PM

இந்த தளத்திற்கு வரும்போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். திருக்குறளையும் அதன் விளக்கங்களையும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட விளக்கங்களுடன் தந்திருப்பதும் ஆங்கில விளக்கமும் அதிக பயன் தருகிறது. என் மனமார்ந்த நன்றி. my email id is philipjsekar@gmail.com

March 16, 2014 at 11:46 AM

அறம், பொருள், இன்பம், வீடு என்பதே நம்மின் சனாதன சித்தாந்தம். அதில் ‘வீடு’ என்பதைப் பற்றிப் பேசவோ, புரிந்துக்கொள்ளவோ இயலது. ஆக, மற்ற மூன்றினைப் பற்றி ஆசிரியர் மிகவும் அழகாக இக்குறளுருவில் எடுத்துரைகிறார். என்னைப் பொருத்தமட்டிலும், நான்கு குருடர்கள் எப்படி ஒரு யானையைத் தடவிப்பார்த்து, ‘யானை இப்படித்தான் இருக்கும்’ என்று ஒரு முடிவுக்கு வருகிறார்களோ, அப்படித்தான் இக்குறளை உருசிபார்க்கும் ஒவ்வொருவரும் ஒரு முடிவுக்கு வருகிறர்கள். அஃது எளியோர்க்கு எளிமையாகவும் கற்றோர்க்குக் கடினமாகவும் இருப்பதே அதன் தனிச்சிறப்பு. மறையன்றி மற்றொன்றஃதிரா.

அப்பேற்பட்ட இக்குறளுக்காக நீராற்றிவரும் இப்பணி உம்பிறவியின் பயனைப் பறைசாற்றுகிறது.

எமது மனமார்ந்த நன்றிகள்.

April 15, 2014 at 5:21 AM
Bharathi  

Great work sir!

July 7, 2014 at 10:25 PM
Anonymous  

THANK U VERY MUCH FOR YOUR GREAT SERVICE
N.ADAIKAPPAN

August 14, 2014 at 1:00 PM
செந்தில்குமார்  

தலைவணங்குகிறன்

December 17, 2014 at 7:00 PM

திருக்குறளால் மட்டுமே மனிதம் மாண்படையும்.
உங்களால் மட்டுமே அந்நற்செயல் சிறப்படையும்.
வாழ்க!! தொடர்க! ! !

January 1, 2015 at 10:14 PM
Anonymous  

Thank you for sharing

January 29, 2015 at 10:18 AM

இறைவன் என்ற வார்த்தையை திருவள்ளுவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.ஆனால் அந்த வார்த்தையை கலைஞர் தவிர்த்து,அதற்கு வேறு ஏதோ பொருள் கூற முற்படுகிறார்...வேடிக்கை

February 19, 2015 at 7:15 AM
Anonymous  

ப்ரிமேல் அழகர் உரை அற்புதம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!

February 22, 2015 at 9:55 PM
NATARAJAN D  

Thirukkural though written some two thousand years ago by Saint Thiruvalluvar, it contains pellets of wisdom having universal appeal. The very fact that it has been translated in 80+ languages is a clear proof of its utility. Through your effort, you are doing a great service not only to Tamil Language, but also to the whole humanity, who will be immensely benefitted.

Thanks for providing the commentaries of Parmel Azhagar and Manakkudavar also, which are very near to the meaning and content of original version of the poet-saint, Thiruvalluvar. Thanks a lot.

March 10, 2015 at 11:21 AM

Andavan Tmilai Paddathan Tamil Andavani Binpatri Vazlkirdhu mahesh tamilan

March 18, 2015 at 8:14 AM

"மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்" என்று சிலர் பதிவு செய்கிறார்கள்.
நீங்கள் திருவள்ளுவரை மனிதனாகத்தான் புரிந்துள்ளீர்களா? பின் கீதையைக் கொடுத்த கிருஷ்ணரை மட்டும் எப்படி இறைவன் என்று நம்புகின்றீர்கள்? பதிவும் செய்கின்றீர்கள்?

உலகில் மனுவாய்த் தோன்றி பின்னர் மறுபிறப்பு அடைந்து அமரராகி, உலகில் மகான்களாக வாழ்ந்தவர்கள்தான் அவர்களின் தூலமறைவுக்குப்பின் பின்னர் தெய்வங்களாகப் பார்க்கப்பட்டுள்ளனர்.

வள்ளுவர் இவ்வுலகில் வாழ்ந்த மகான், மெய்க்குரு, மகா முனிவர், மகா பிரம்மரிஷி. இன்னும் சொல்லப்போனால், உலகோர் அனைவரும் இறைநிலையை அடைய, அந்நிலையை அடைந்து அதன் வழிகளைக் காட்டிய கடவுள், உலகின் ஒட்டுமொத்த தமிழர்களின் தெய்வம், பகவான், இறைவன் ஆவார்.

மனிதன்தான் இறைவன் ஆகிறான் என்பதால் இறைவன் - மனிதன் - நரன் என்பதுதான் சரியான வரிசை.

மனிதன் தனது அறிவை நரனுக்குச் சொல்லலாம், இறைவனுக்குச் சொல்லவேண்டியதில்லை.

இறைவன்தான் அனைவருக்கும் உரைக்க முடியும். மனிதன்தான் இறைநிலையை அடைய வேண்டும். எனவே அதன் வழிகளை இறைவன்தான் மனிதனுக்கு உரைக்க வேண்டும்.

அப்படி உரைத்தவர்தான் திருவள்ளுவர்.

"மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்" என்று பதிவு செய்வது சரியன்று.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னதுதான் திருக்குறள்", என்பதுதான் சரி.

நல்லவர்களின் தூய பணியால் தமிழ் வளர்ந்து, வாழ்ந்து, நிலைக்கட்டும்., அவர்களின் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.

----- பிரம்மரிஷி பேரானந்த ஜெயதேவர்.

May 2, 2015 at 5:20 PM
Anonymous  

In my view No one has given proper meaning.Language(Tamil)literature knowledge alone is not enough to expose the actual meaning of the Holy Thirukural.It need dedication to go through the relevant subject and pursuance of the relevant masters. Then only the meaning will be in complete sense.

July 22, 2015 at 11:53 AM

Wonderful Job, Excellent work, creativity

January 2, 2016 at 8:47 AM
Savathree Chetty  

I am from Durban, South Africa. Thank you so much for your selfless deed of sharing your knowledge. Shivas richest blessing.

January 17, 2016 at 11:50 PM

Epdi padichalum, intha adhigaram mattum Valluvar ezhuthirukkarunu manasu yethukka maatenguthu..

February 1, 2016 at 5:37 PM

This year one of my resolution was Daily go through one thirukural.This online site play a role for that.

"THAMIZHAN ENDRU SOLLADA THALAI NIMIRTHU NILLADA"

by

r@j

February 25, 2016 at 7:35 AM
Anonymous  

For the last Kural of 'Kadavul Vazhththu' "Piravi perungadal…", the actual sense is not brought forth by any of the interpreters. It starts with "Piravi perungadal neendhuvar".. meaning - everyone who is born swims across the ocean of life. "Neendhar, iraiva aid seradhar".. meaning - but, those who don't accept God in their lives do not swim.. they struggle and panic, cos they do not have a support when they feel they are drowning.

May 2, 2016 at 2:53 AM
This comment has been removed by the author.
August 11, 2016 at 12:36 PM

Enathu karutthu naam intha pirappu muthal irappu varai ulla kadal pontra valkaiyai olukkamudan neentha vital kadavulai sentru adaiya mudiyaathu enpathe... Ovvoruvarin purinthu kolluthal oru oru mathiri valluvarukke velicham

August 11, 2016 at 12:41 PM

Enathu karutthu naam intha pirappu muthal irappu varai ulla kadal pontra valkaiyai olukkamudan neentha vital kadavulai sentru adaiya mudiyaathu enpathe... Ovvoruvarin purinthu kolluthal oru oru mathiri valluvarukke velicham

August 11, 2016 at 12:44 PM

Hi

August 11, 2016 at 12:44 PM
Sivakumar.t  

Great

September 16, 2016 at 2:18 AM
Charu vikky  

Great compared to all in tamil literature

January 16, 2017 at 8:08 AM

Super blog :) I'm too coward :( I wanted to grow bold.. dhairyama vaaza thirukuralil edavadu adigaram irundal sollunga.. Nandri. Tamil Vaazhga!!

February 6, 2017 at 3:17 AM
K MAHARAJA TAMILNADU  

சிறந்த பணி செய்துள்ளீர்கள்.மிக்க நன்றி.

February 18, 2017 at 8:38 AM
Anonymous  

உண்மையான மொழி பெயர்ப்பு அது சொல்லுகிற விஷயத்தில் தன்னுடைய நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் திணிக்காமல் அதனை அப்படியே பொருள் கூறுவதுதான். அதன்படி சிலருடைய பொருளுரைகளை தவிர்த்திருக்கலாம்.

February 24, 2017 at 7:03 AM

அறவாழி அந்தணன் என்பது தெளிவாக இருக்கும் போது அதை ஏன் கடவுள் என்று சாலமன் பாப்பையா அர்த்தப்படுத்திக் கொள்கிறார்?

April 20, 2017 at 3:38 AM
Anonymous  

சிறப்பான பணி! - கணேசன்

September 27, 2017 at 11:28 PM

ஒவ்வொரு குறளின் பொருளையும் ஒரு கதை மூலம் வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் அவற்ரைப் படித்துப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.

March 18, 2018 at 4:22 AM
Anonymous  

long live thirukkural

April 1, 2018 at 12:18 AM
Anonymous  

vel vel muruga................

April 1, 2018 at 12:19 AM

still need to simply more for better understand

April 5, 2018 at 7:39 AM

Great Work

August 1, 2018 at 3:06 AM

கலைஞரின் உரை சரியான உளறல் களஞ்சியம். பெரும்பாலான குறள்களுக்கு இப்படித்தான் உளறிக்கொட்டியிருக்கிறார்.

October 27, 2018 at 4:09 AM
This comment has been removed by the author.
November 13, 2018 at 11:44 PM

An excellent service to Thirukural. As a person born and brought up in a village of Southern Tamil Nadu, I found the Kadavul vaalthu kuralkal arumai. However, I have a feeling the Thirukural urai by all the 5 authors carry one or other deviations according to the author. The uraialarkal interpreted the Kural with minor insertions or ommissions. For example: There is no mention about God but some of the authors interpreted as God whereas Dr Kalaingar omitted Kadavul (being an atheist?) that seems correct. As most authorities on Kural says the seven words (4+3) of kural are like the seven oceans of this earth. So we need to dive deep to understand the full meaning of each word (Ex: enkunam, iruvinai, anthanan (must be meaning of aantrone..similar to "anthuvan" name found in Mankomabi inscription of 300BC in Theni Dt of Tamil Nadu). All the Best.

November 13, 2018 at 11:49 PM

thirukural needs for me

February 1, 2019 at 11:15 AM
Anonymous  

All the scripts(in any language) are lead by the accent(sound) A, as such, the world is lead by the God.

February 12, 2019 at 4:40 PM
Anonymous  

mahatththaana makkal pani

July 8, 2019 at 12:35 PM

இறைவன் அடி என்றால் என்ன?ஆதியும் அந்தமும் இல்லாதவன் அடி முதல் கண்டவர் யவர்

October 1, 2019 at 10:30 AM

உனர்த்திய தலைமகன் அறம் பௌருள் இன்பம் இயற்கை என்பதை உலகம

September 16, 2021 at 11:16 AM
Naushad Khan  

"தனக்குவமை இல்லாதான்" இறைவனுக்கு இணை, துணை,உருவம் இல்லை என்ற ஓரிறை கொள்கை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் மண்ணில் தோன்றியது தமிழருக்கு பெருமை சேர்ப்பதாகும்

October 26, 2021 at 11:23 PM
Naushad Khan  

அந்தணர் என்போர் அறவோர்===அற வழியில் நிற்போர் அனைவரும் அந்தணர் ஆவர்

October 26, 2021 at 11:49 PM
Naushad Khan  

அந்தணர் என்போர் அறவோர்= அற வழி நிற்போர் அனைவரும் அந்தணர் என்று பொருள் கொள்ளலாமா

October 26, 2021 at 11:53 PM
Naushad Khan  

அந்தணர் என்போர் அறவோர், அற வழி நடப்போரை அந்தணர் என்று பொருள் கொள்ளலாமா

October 26, 2021 at 11:57 PM

மனிதன்தான் இறைவன் ஆகிறான் என்பதால் இறைவன் - மனிதன் - நரன் என்பதுதான் சரியான வரிசை.

மனிதன் தனது அறிவை நரனுக்குச் சொல்லலாம், இறைவனுக்குச் சொல்லவேண்டியதில்லை.

இறைவன்தான் அனைவருக்கும் உரைக்க முடியும். மனிதன்தான் இறைநிலையை அடைய வேண்டும். எனவே அதன் வழிகளை இறைவன்தான் மனிதனுக்கு உரைக்க வேண்டும்.

அப்படி உரைத்தவர்தான் திருவள்ளுவர்.

"மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்" என்று பதிவு செய்வது சரியன்று.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னதுதான் திருக்குறள்", என்பதுதான் சரி.

நல்லவர்களின் தூய பணியால் தமிழ் வளர்ந்து, வாழ்ந்து, நிலைக்கட்டும்., அவர்களின் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.

January 26, 2022 at 9:18 AM

சிறந்த சேவை

November 24, 2023 at 5:14 AM

Post a Comment