திருக்குறளின் பெருமைகள்

Posted Print Friendly and PDF

திருக்குறளின் பெருமைகள் - முனைவர் தொ.பரமசிவன்

மிகவும் அரிதான செய்திகளை தொல்லியல் ஆதாரங்களோடு திருக்குறளின் பெருமைகளை தொ. பரமசிவன் (முனைவர் - தமிழ்த்துறை ம. சு. பல்கலைக் கழகம், திருநெல்வேலி) அவர்கள் இங்கு வழங்குகிறார்.

உலக நாகரிகத்திற்குத் தமிழினத்தின் பங்களிப்புகள் பல. அவற்றுள் இரண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஒன்று, தமிழிசை மற்றொன்று திருக்குறள். தமிழில் மிகச் சில சொற்களில் ஆன கவிதை வடிவம் குறள் வெண்பா ஆகும். மிக விரிந்த உலகச் சிந்தனைகளை மிகக் குறுகிய வடிவத்தில் தர முடியும் என்பதை உலக இலக்கிய அரங்கில் முதலில் வள்ளுவரே செய்து காட்டினார் எனலாம். சின்னக் குழந்தையின் சிரிப்பு முதல் 'மெய்யுணர்தல்' வரை வள்ளுவர் மண்ணுக்கும் விண்ணுக்குமான சிந்தனைகளைத் தம் அளவிற்சிறிய நூலில் பொதிந்து வைத்துள்ளார்.
வள்ளுவரது காலம் பல்வேறு அறிஞர்களால் கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை அறுதியிடப்படுகிறது. இலக்கிய வரலாற்று நோக்கில் பார்ப்பதானால், சங்க இலக்கியங்கள் பெரும்பாலானவற்றுக்குத் திருக்குறள் காலத்தால் பிற்பட்டது; சிலப்பதிகாரத்துக்கு முற்பட்டது.

இளங்கோவும், கம்பரும் ஆக்கியளித்த பேரியலக்கியங்களில் 'தமிழ்' என்ற அடையாளத்துக்குள்ளேயே அவர்களது முகம் தெரியும். வள்ளுவத்தை மட்டும் 'உலகப் பொதுமறை' என்கின்றோம். காரணம் என்ன? தமிழ் மொழியில் அமைந்தது என்பதைத் தவிர, இனம், நாடு குறித்த வெளிப்படையான தன்னடையாளம் எதையும் வள்ளுவர் தம் நூலில் கூற முற்படவில்லை. தமிழ், தமிழ்நாடு, வஞ்சி, மதுரை, பாண்டியர், சோழர் ஆகிய அடையாளம் காட்டும் எந்தச் சொல்லும் திருக்குறளில் காணப்படவில்லை. வள்ளுவரின் சமகாலத்தில், ஏன், அவருக்குப் பின்னரும் கூட, இந்தியத் துணைக் கண்டத்தில் இலக்கியங்களின் வழி அறம் பேச வந்தவர்கள் சாதி, சமயம், நிலப்பகுதி ஆகிய அடையாளங்களைத் தாண்டிச் செல்ல இயலவில்லை வள்ளுவர் மனிதப் பொது அறம் பேசியவர். அவரது இயற்பெயர் கூட நம்மால் அறியப்பெறவில்லை வள்ளுவர் என்பது ஒரு குடிப்பெயராகும்.

'இன்பத்துப் பாலை'க் கொண்டும் 'மக்கட்பேறு' அதிகாரத்தைக் கொண்டும் அவர் மணமானவர், மழலை இன்பம் துய்த்தவர் என்பதை அறிய முடிகிறது.

'நேற்று வந்த பசி இன்றும் வந்துவிடுமோ', (குறள் எண் 1048) என்று அஞ்சுகிற இடத்திலும் 'நெருப்பிலே தூங்கலாம். பசியிலே தூங்க முடியாது' என்ற தன்னிரக்கம் காட்டும் இடத்திலும் வறுமையோடு போராடிய வள்ளுவரின் தனி வாழ்க்கையினை நாம் உய்த்து உணரலாம். இவையன்றி, திருக்குறளிலிருந்து அந்த மானுடப் பெருமலையின் எந்தப் பக்கத்தையும் நம்மால் அறிய முடியவில்லை.

இனி, வள்ளுவரின் காலத்தில், தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த அல்லது தமிழ்ச் சமூகத்தை இயக்கிக் கொண்டிருந்த கருத்தியல்களை நோக்கலாம். தமிழகத்தில் புகுந்த வைதீகப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டு அரசு அதிகாரத்திற்கு அருகில் அமர்ந்துள்ளனர். "ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்த" தமிழ் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். மறு புறமாக, வைதீகத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சமண, பௌத்த மதங்கள் தமிழ் நாட்டில் தங்கள் செல்வாக்கைப் பரப்பத் தொடங்கியிருந்தன. வள்ளுவர் வைதீகத்திற்கு எதிராகக் குரலெழுப்பியவர், 'பிறப்பு வழி வேற்றுமையே', வைதீகக் கொள்கையின் உயிர்நாடி. இந்தக் கொள்கை அதிகாரத்திற்கு நெருக்கமாக இருந்த பொழுது 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்ற வள்ளுவரின் குரல் கலகக் குரல்தானே. அதுபோல 'அந்தணர்' என்ற சொல்லைப் பார்ப்பனர்கள் தமக்கு வழங்கிய காலத்தில், வள்ளுவர் அச்சொல்லுக்கு 'அந்தணர் என்போர் அறவோர்' என்ற எதிர்மறை வரைவிலக்கணம் தர முற்படுகின்றார்.

நமது நிகழ்கால நோக்கில் வள்ளுவத்திற்குப் 'போதாத காலம்' ஒன்று இருந்தது. 17,18, 19 ம் நூற்றாண்டுகளில் தென்னகத்திற்கு வந்த மேல் நாட்டு அறிஞர்கள் திருக்குறளை உச்சி முகர்ந்து தலை மேல் வைத்துக் கொண்டாடினார்கள். ஆனால், 18 ஆம் நூற்றாண்டில் வந்த காலனிய அரசு கல்கத்தாவில் மையம் கொண்டிருந்தது. எனவே, உள்நாட்டு நீதி முறைகளைத் தொகுத்த காலனி ஆட்சியாளர்களின் பார்வையில் திருக்குறள் படவில்லை. அதன் விளைவாக, மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட 'இந்து சட்டம்' இந்திய ஏழை மக்களின் தலையில் விடிந்தது. ஆனாலும் கூட திருக்குறனை ஐரோப்பிய மொழிகளில் பெயர்த்த நன்றிக்குரியவர்களின் பெயர்களை இங்கே நினைக்கலாம். ஜி.யூ. போப் (G.U. Pope), கிண்டர்ஸ்லி (Kindersley), எல்லிஸ் (F.W. Ellis), ட்ரூ (W.H. Drew), சார்லஸ் கி. கோவர் (C.E. Gover), ராபின்ஸன் (E.G. Robinson), லாசரஸ் (Rev. G. Lazarus), ஸ்காட் (T.M. Scott), பாப்லி (H.A. Popley) ஆங்கிலத்திலும், பெஸ்கிப் பாதிரியார் (Father Beschi), டாக்டர் கிரேளல் (Dr. Graul) ஆகியோர் இலத்தீன் மொழியிலும் ஏ.எப். காம்மர்ஸ் (A.F. Commers), ப்ரீட்சிக் ரூகர்ட் (Friedrich Ruckert) ஆகிய இருவரும் ஜெர்மன் மொழியிலும் இ. ஏரியல் (E. Ariel), டிடூமாஸ் (P.G. De Dumast), எம். லெமரேஸ், லூயி ஜெகோலியா (Louis Jacolliot), பொண்டேனோ (G.de. Barrigue de.Fontainieu) போன்றோர் பிரெஞ்சு மொழியிலும் திருக்குறளைப் பெயர்த்துள்ளனர். கி.பி. 1810-இல் கிண்டர்ஸ்லி (Kindersley) திருக்குறளின் சில பகுதிகளை முதலில் அச்சு வாகனம் ஏற்றினார். அதே கால அளவில் 'எல்லீசன்' என்று தம் பெயரைத் தமிழில் எழுதியவரும். அன்றைய சென்னை மாநிலத் தலைமை நிதி அதிகாரியுமான எல்லிஸ் (F.W. Ellis) வள்ளுவ தாசனாக வாழ்ந்திருக்கிறார். கி.பி. 1818-இல் சென்னையில்; உருவான குடிநீர்த் தட்டுப்பாட்டினைப் போக்க, எல்லீஸ் வெட்டிய கிணறுகளில் ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது. இக்கிணற்றின் கைப்பிடிச் சுவரில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லில் எல்லீஸ் துரை 1818-ம் ஆண்டில் வெட்டி வைத்த கல்வெட்டு இன்றளவும் நம் பார்வைக்கு உள்ளது. அதில்,

சாயங்கொண்ட தொண்டியசாணுறு நாடெனும்
ஆழியிலிழைத்த வழகுறு மாமணி
குணகடன் முதலாக குடகடலளவு
நெடுநிலந்தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத் தெல்லீச னென்பவன் யானே
பண்டார காரியப் பாரஞ்சுமக்கையிற்
புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குற டன்னிற் றிருவுளம் பற்றிய
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு


என்பதின் பொருளை யென்னுள்ளாய்ந்து... என்ற வரிகளில் ஓர் அழகிய குறளை மேற்கோளாகக் கையாண்டிருக்கிறார்.

மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரிலுள்ள எல்லிஸ் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. இதில் ( 'எல்லீசன் என்னும் இயற்பெயருடையோன்
திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி
அருள் குறள் நூலுள் அறப் பாலினுக்குத்
தங்கு பல நூல்உ தாரணக் கடலைப் பெய்(து)
இங்கி லீசுதனில் இணங்க மொழி பெயர்த்தோன்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளிலிருந்து எல்லிஸ் துரையின் ஆழ்ந்த தமிழ்ப்புலமையும் அவருக்குத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் இருந்த ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றன.

எல்லிஸ் மாநில நிதி அதிகாரியாகவும், அக்கசாலை (Mint)யின் தலைவராகவும் இருந்த காரணத்தால், திருவள்ளுவர் உருவம் பொறித்த (புழக்கத்தில் வராத) தங்க நாணயங்களை வெளியிட்டார் என்று தெரிகிறது. இந்நாணயங்களை அண்மைக் காலத்தில் நாணயவியல் அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன், அளக்குடி ஆறுமுக �தாராமன் ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர்.

திருக்குறளின் பெருமையில் நாட்டமுடைய உரையாசிரியர்கள் பலர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர். 12-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே, பரிமேலழகர் உள்ளிட்ட பத்துபேர் குறளுக்கு உரை செய்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் சாதி, சமய எல்லை கடந்து 50-க்கும் மேற்பட்டோர் உரை எழுதியுள்ளனர். திருக்குறளுக்கு எழுந்த உரை நூல்களுள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை சில. பரிமேலழகர், மு. வரதராசனார், தேவ நேயப் பாவணர் ஆகியவரோடு ஐரோப்பிய மொழிகளில் பெயர்த்த வீரமாமுனிவர் இந்நூலின் அகத்துப்பாலுக்கும், பொருட்பாலுக்கும் தமிழில் உரை எழுதியுள்ளார்.

திருக்குறளுக்கு இருபதாம் நூற்றாண்டில் ஒரு பெண்மணியும் உரை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்த செய்தி. திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஜெமீன் தாரிணி கி.சு.வி. இலட்சுமி அம்மணி என்பார் 1929-ல் 'திருக்குறள் தீபாலங்காரம்'. என்ற பெயரில் சாது அச்சுக்கூடப் பதிப்பாக ஒரு உரை நூலை வெளியிட்டுள்ளார்.

ஜார்ஜ் உக்ளோ போப் என்ற ஜி.யு. போப் (1820-1908) என்பது தமிழர்கள் நன்றியுடன் நினைக்கக்கூடிய பெயர்களில் ஒன்று. திருக்குறனை முழுமையாக ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்த்தவர் இவரே. 1886 - இல் இவரது திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானது. தமிழ் எழுத்து இலக்கியங்களை முறையாகப் பயின்ற ஜி.யு. போப் தமிழ்ப் பேச்சு மொழியின் நுட்பங்களையும் உணர்ந்தவர். அவரது 'திருவாசக' மொழிபெயர்ப்பு உலகறிந்த ஒன்று. சைவ சாத்திர நூலான 'திருவருட் பயனை'யும், தமிழ்ச் சமூகத்தின் எட்டாம் நூற்றாண்டு வாழ்வியலைக் காட்டும் 'புறப்பொருள் வெண்பா மாலை' என்றும் இலக்கண நூலையும் மொழி பெயர்த்துள்ளார். நீதி நூலான 'நாலடியாரை'யும் மொழிபெயர்த்தார். புறநானூற்றின் சில பாடல்களை மொழி பெயர்த்ததோடு அந்நூல் குறித்த கட்டுரைகளையும் அக்கால இதழ்களிலே எழுதியுள்ளார். போப் இலண்டனில் 1908-ல் காலமானார்.

போப்பின் குறள் மொழிபெயர்ப்பு நூலைப் பின்னர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இருபதாம் நூற்றாண்டில் வெளியிட்டது. அதில் போப் எழுதிய முன்னுரையின் சில பகுதிகள் விடுபட்டுள்ளதாக கா. மீனாட்சி சுந்தரம் குறிப்பிடுகின்றார்.

இங்கு திருக்குறளுக்கு மட்டும் போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. இம் முயற்சி குறளை யாவரிடத்தும் கொண்டு செல்வதற்கும், தமிழ் அறியாதாரிடத்தும் குறளை அறிய வைப்பதற்குமான முயற்சியாகும்.

தொ. பரமசிவன், 31.12.2002, பாளையங்கோட்டை

நன்றி: யாதுமாகி , திருநெல்வேலி.