பேராசிரியர் மா.நன்னன் பதிப்புரை

கலைஞர் உரையின் பெற்றியினை, 1 தேவை, 2 வழிபாடு, 3 பெண் வழிச்சேறல், 4 ஊழ், 5 பல்வகைச் சிறப்புகள் என்னும் அய்ந்து பகுப்புகளில் சுட்டிக் காட்டுவது இப்பதிப்புரையின் கடமை, எனக் கருதப்படுகிறது. இவற்றுள் வழிபாடு என்பது கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத்துக்குக் கலைஞர் சூட்டிய சரியான பெயராகும், பின்பற்றுதல் என்னும் பொருள்பட வழிபாடு என்பது அதன் பெயராக அமைந்தது. முதற்கண் கலைஞர் உரையின் தேவை குறித்துச் சிறிது கூறப்படுகிறது.

1. தேவை

``உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' என்றும், ஈ.கை அறம் என்றும் கூறப்படுவனவற்றுக்குக் காரணம் யாது? உலகில் இல்லாமை இருப்பதுதானே! அது மட்டுமே ஈ.கைக்குக் காரணமா? அன்று; இருப்பது இல்லாதிருந்தால் அஃதாவது உடைமை இன்மையாயிருப்பின் ஈ.கை ஏற்பட்டிராதன்றோ? ஆகவே, உலகில் வறுமையும் இருக்கிறது; அதற்கு எதிரான உடைமையும் இருக்கிறது. அதனாற்றான் ஈ.கையறம் பிறந்தது.
இந்நிலையிலிருந்து நாம் மற்றொன்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அது யாது எனில், தம் தேவைக்கு மேல் சிலரிடம் செல்வம் இருக்கிறது; அதனாற்றான் வேறு சிலரின் தேவைக்கு அது கிடைக்கவில்லை என்பதாகும். மேலும் சற்று விளக்கமாக இதைக் கூறுவதானால் உலகம் வறுமையால் வாடுவதற்குக் காரணம் பொருள் இல்லாமை அன்று; அப்பொருள் அனைவர்க்கும் கிடைக்கும் ஏற்பாடில்லாமையே என்பதாகும்.
அவ்வாறே, உலக வாழ்வு செம்மையாக நடைபெற இன்றியமையாததாகிய ஒழுகலாறு அஃதாவது ஒழுக்கம், அதனையொட்டிய நெறிமுறைகள் ஆகியன தேவை. இன்று உலகின் ஒழுகலாறு அஃதாவது உலக நடைமுறை கடைமுறையாகிக் குடைசாய் முறையாகவும் ஆகிக்கொண்டிருப்பதை நாம் பலரும் அறிந்து, கண் கலங்குவோரும் கைபிசைவோரும் படபடப்போரும் துடிதுடிப் போருமாக உள்ளோம். உலகில் அறம் இல்லாமையாலோ, ஒழுக்கம் பிறக்காமையாலோ, அஃது அழிந்துவிட்டதாலோ இந்நிலை ஏற்படவில்லை. ஒழுக்க நெறிமுறை அல்லது அறநெறி பலருக்கும் அறியக்கூடியதாக ஆக்கப்படாமையும் இதற்குக் காரணமாக உள்ளது.

அறம் உரைக்க முயன்ற பற்பலரும் அவ்வறத்தை நேராக உரைத்தால் மக்கள் பின்பற்ற மாட்டார்கள் என்று கருதியதாலோ, அறத்தின் வாயிலாகத் தாம் விரும்பும் வேறு சில கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்னும் வேட்கையாலோ மக்கள் வாழ்வுக்கு அருமருந்தாகிய அறத்தை மதம், கடவுள், புராணக்கதை போன்ற பலவற்றுடன் குழைத்துக் கொடுத்தனர். அது, மருந்தைவிட அதற்குத் துணையாக அதனுடன் கலந்து தரப்பட்ட எண்ணெய் முதலியவற்றின் வலிமிகுதியால் எண்ணெய் முதலியவற்றின் கேடுகளே மீதூர்ந்து அடர்த்து மன்பதையைச் சீர் குலைத்துவிட்டதைக் காண்கிறோம். ஆகவே, பிறர் பலரும் அறம் உரைப்பதற்கு மேற்கொண்ட முறைகள் பயன் விளைக்காமையோடு கேடு பலவும் சூழ்ந்தன என்பதையும் காண்கிறோம்.

பொருளை எல்லார்க்கும் கிட்டும்படிச் செய்வது போன்று அறத்தை அனைவரும் உணரும்படிச் செய்வதே தேவை. மாந்தர் பிறர் பொருளைச் சுரண்டாமல் காப்பது போன்று சிலரோ பலரோ பொது அறத்தைக் குலைக்காது காத்தல் அடுத்த கடமை. முதற் கடமையை வள்ளுவர் போல் முழுமையாகவும், சார்பற்றும், நேரடியாகவும், பொதுவாகவும், எளிமையாகவும் செய்தோர் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியவர்களாகவே இன்றுவரை உள்ளனர்.

வள்ளுவர் ஈ.டற்ற முறை ஒன்றைப் பின்பற்றி அறம் உரைத்தாராயினும், மக்கள் அறிவுநிலை வேறுபாட்டால் அதை உணரும் திறம் அற்றவர்கள் ஆயினர் என்பதைவிட ஆக்கப்பட்டனர் என்றுரைப்பதே சரி. அதனாற்றான் குறளுக்கு முதலில் தோன்றிய பத்து உரைகளோடு இன்று வரை எத்தனையோ உரைகள் வந்துள்ளன. அவற்றுள் இக்காலத் தேவையைச் சரியாக ஈ.டு செய்ய வல்லதாய் எழுந்ததே கலைஞர் உரை என்னும் தெரியுரையாகும்.

2. வழிபாடு

கடவுள் பற்றிய எண்ணம் மக்கள் தோன்றிய காலத்திலோ, அதன் அண்மைக் காலத்திலோ ஏற்பட்டிருக்க முடியாது. மக்கள் அறிவு வளர்ச்சி ஏற்பட்டுச் சிந்திக்கத் தொடங்கிய போதுதான் அந்த எண்ணம் அவர்களுக்குத் தோன்றியிருக்க முடியும். தான் கண்ட உலகத்தையும், அதில் காணப்பட்ட பல்வகைப் பொருள்களையும் உண்டாக்கிய ஒருவன் இருக்கவேண்டும் என்றும், அவைகளையெல்லாம் கட்டிக்காத்து ஒழுங்காக நிருவாகம் செய்வதற்கு ஒருவன் இருப்பது நல்லது என்றும் அப்பழங்கால மாந்தன் எண்ணத் தொடங்கியிருப்பான். அதன் விளைவுதான் கடவுளைப் பற்றிய பல்வேறு வகைப்பட்ட கருத்துகளாக உருவெடுத்துப் பல்கிச் செழித்து வளரத் தலைப்பட்டிருக்க வேண்டும். அறிவின் தெளிவால், பகுத்தறிவின் உதவியால் பிறகு கடவுள் பற்றிய எண்ணம் மெலியத் தலைப்பட்டது. மேலும் அதன் இருப்பு மெய்ப்பித்து உறுதிப்படுத்தப்படாமையால் கடவுள் பற்றிய மாறுபாடான கருத்து வலுப்பெற்றுப் பெருகி வருகிறது. கடவுள் வாழ்த்து என்னும் பெயரால் திருக்குறளில் ஓர் அதிகாரம் இடம் பெற்றுள்ளதாயினும் அதில் கடவுள் என்னும் பெயரே இடம் பெறாததோடு இன்று கடவுள் பற்றிக் கூறப்படும் பல கருத்துகளுக்கு இடமளிப்பதாகவும் அந்த அதிகாரம் அமையவில்லை. இதுபற்றிக் கலைஞர் உரை தன் பங்கினைச் செய்யத் தவறவில்லை என்பதை முதல் பத்துக் குறட்பாக்களுக்கு அவர் நடுவு நிலையிலிருந்து எழுதியுள்ள உரைகளின் வாயிலாக அறியலாம்.

3. பெண்வழிச் சேறல்

கொடி முந்திரிப் பழத்தை (அது தனக்குக் கிட்டாதென்பதால்) மறக்க விரும்பிய நரி அதற்காக அதை வெறுக்க முயன்று, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று கூறிய காரணத்தைப் போலவே பெண்ணின்பத்தை மறக்க விரும்பியவர்கள் அதை மறக்க முடியாமையால் வெறுக்கத் தொடங்கி அதற்காகவே பெண்ணை இழித்தும் பழித்தும் கற்பித்துப் பேசத் தொடங்கினர். இச்செயல் நாலடியார் போன்ற இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்றுள்ளது. அக்கருத்துக்காட்பட்ட பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களும் திருவள்ளுவரின் கருத்துக்கு மாசு விளையாமல் உரையெழுத இயலாதோராயினர். அதன் விளைவே பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரக் குறள் பத்துக்கும் அவர்களால் தரப்பட்ட விளக்கமாக நிலைத்து விட்டது. திருவள்ளுவரின் கோட்பாட்டில் கோணல் ஏற்படுத்தும் இப்போக்கினை மாற்ற விரும்பிய கலைஞரின் பங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களுக்கும் கலைஞர் வகுக்கும் உரையை முறையே காணலாம்.
  1. கடமையுடன் கூடிய செயல் புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெறமாட்டார்கள்.
  2. ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வேட்கித் தலை குனிய வேண்டியதாக ஆகிவிடும்.
  3. நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்துபோகிற கணவன் நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.
  4. மணம் புரிந்து புது வாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
  5. எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.
  6. அறிவும் பண்பும் இல்லாத மனைவி அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள் தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.
  7. ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக்கொண்டு கிடக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும் மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.
  8. ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள் நண்பர்களைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்ற மாட்டார்கள்.
  9. ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகட்கு அடங்கி இயங்குகின்ற பெண் பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ, சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
  10. சிந்திக்கும் ஆற்றலும், நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்கமாட்டார்கள்.
காந்தத்துக்கு ஈர்க்கும் தன்மையும் இரும்புக்கு அதனால் ஈர்க்கப்படுந் தன்மையும் இருப்பது போல் பொதுவாகப் பெண்ணுக்கு ஆணை ஈர்க்கும் கவர்ச்சியும், ஆணுக்குப் பெண்ணின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டுப் பெண் வழிச் செல்லும் காம உணர்வும் உள்ளன.

இந்த அடிப்படையிற்றான் கலைஞர் வள்ளுவரின் பெண் வழிச்சேறல் எனும் அதிகாரத்தைக் காண்கிறார். அவ்வாறு கண்ட கலைஞர் தம் உரையின் வாயிலாகப் பழைய உரையாசிரியர்களால் பெண்மைக்கு ஏற்பட்டிருந்த பழியை நீக்கியுள்ளார்.

4. ஊழ்

கடவுள், ஆன்மா ஆகிய இரண்டும் மக்களை இன்றுவரை தெளிவடைய ஒட்டாது குழப்பிக் கொண்டுள்ளன. இவை இரண்டும் போல் குழப்பந்தரும் கருத்து வேறு எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. சற்றுக் கூடுதலாக ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால் அவைகளுக்கு அடுத்த நிலையில் ஊழ் என்பதைக் குறிப்பிட முடியும். சிலரைப் பொருத்தவரை முன்னவை யிரண்டையும் விட இம் மூன்றாவதற்கே அதிகப் குழப்பம் அடைகின்றனர் என்றும் கூறலாம். ஊழ், விதி, தலை எழுத்து, கர்மா என்றெல்லாம் சொல்லப்படும் ஒரு கற்பனைத் தத்துவம் பற்றிய குறட் பகுதிக்கு உரையாசிரியர்கள் குழப்பந்தரும் உரைகளையே எழுதிச் சென்றனர். பகுத்தறிவாளராகிய கலைஞர் ஊழ் என்னும் அதிகாரத்திற்குத் தெளிவானதொரு விளக்கத்தைத் தந்திருப்பதோடு இக் கருத்து பற்றிய மாந்தரின் குழப்பம், அதனால் ஏற்படும் அச்சம், கவலை, கையறுநிலை ஆகிய அனைத்துக்கும் தீர்வும் காட்டியுள்ளார்.

ஊழ் என்பதற்குக் கலைஞர் இயற்கை நிலை என்று பொருள் தருகிறார். இயற்கை நிலை என்பதற்கு இயற்கையின் அமைதி, அஃதாவது இயற்கை அமைந்திருக்கும் விதம் என்பது விளக்கமாகும்.

இயற்கை வலிமையானது. வலிமையாக இருப்பதனால்தான் இயற்கை நிலைத்தும் உள்ளது. அதனை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டுமென்பதே ஊழ் என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள வள்ளுவரின் கருத்து என்பதைக் கலைஞர் தம் உரையில் எடுத்துக் காட்டுகிறார்.

இயற்கையின் ஆற்றல் மிகுதிக்குக் ``கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்'' என்னும் உரை சான்று தருகிறது. மேலும் ``இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை உள்ளன'' என்பதும் காணத் தகும்.

ஊக்கம் ஆக்கம் தரும் என்பதும், சோம்பல் அழிவு தரும் என்பதும் இயற்கையின் உண்மையே நல்லவை தீயவாதலும், தீயவை நல்லவாதலும் இயற்கையே.

``ஒருவர் தமக்கு உரிமை யல்லாதவற்றை முயன்று பாதுகாத்தாலும் தங்காமல் போய் விடவும் கூடும்''. இவை போன்றன யாவும் இயற்கையின் நிலை என்பதை உணர்ந்து நடந்தால் பலன் உண்டு. சான்றாக அனுபவிக்கக்கூடிய பொருள் கிட்டவில்லை என்றால் அதன் இயற்கை நிலையை உணர்ந்தவர்கள் அதைத் துறந்து விட்டால் அத்துன்ப உணர்வுகளிலிருந்து தப்ப முடியுமன்றோ? நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள் தீமை விளையும் போது மட்டும் மனம் கலங்குவது ஏன்? எனக் கேட்டுக் கலைஞர் ``அடுத்தூர்வது அஃதொப்பதில்'' என்று கூறத்தக்க விடுதலை நெறிமுறை ஒன்றையும் எடுத்துக் காட்டுகிறார். இயற்கை நிலை வலிது என்பதை உணர்வதும் உணர்ந்து அந்த அறிவை வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்வதும் கலைஞரின் நெறி முறையாக இங்கு அமைந்துள்ளது. நெருப்பு சுடும் என்பதை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வதுதானே அறிவுடைமை?.

5. பல்வகைச் சிறப்புகள்

கலைஞர் உரையில் பற்பல சிறப்புக் கூறுகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில இங்குச் சுட்டிக் காட்டப்படுகின்றன. கலைஞர் ஒரு பாவலருமாவர் ஆதலின் அவர்தம் உரைநடையிலும் பாநலம் காணப்படுவது இயல்பேயாகும். சான்றுகளாக:
அ. பா நலம்

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம் கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன.

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

நான் பார்க்கும்போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.

ஆகியவற்றைக் காணலாம்.

ஆ. அணி நலம்

பிறிது மொழிதல் என்னும் அணியை வள்ளுவர் கையாண்டு கருத்துரைத்துள்ளார். கலைஞரும் அவ்வணியைப் பின்வரும் குறளுரையில் கையாண்டு புதுமை விளைத்திருப்பதைக் காண்க.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
இ. அடை நலம்

அடை மொழிகளைச் சேர்ப்பதன் வாயிலாகவே உவமை விளக்கமளிக்கும் சிறப்பியல்பை அடுத்து வரும் பகுதியிற் காணலாம்.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சி கொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.
ஈ. உரைக் குறள்

பாட்டும் குறள்; அதற்குக் கலைஞர் வகுத்த உரையும் குறளாக அமைந்திருப்பதை அடுத்துக் காண்க.

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து.

மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்.

உ. இடைமிடை சொல் நலம்

இடையில் சில சொற்களைச் சேர்ப்பதன் வாயிலாகக் குறளின் பொருளில் நேரும் முட்டறுக்கும் பெற்றியை பின் உள்ள பகுதி காட்டும்.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

இன்சொல் பேசி எல்லாரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.

இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.


வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.

ஊ. தெளிவு

உரைத் தெளிவுக்கு,

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
ரைத்தலும் நாணுத் தரும்.


காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.

எ. சுருக்க விளக்கம்

சுருக்க விளக்கத்துக்கு,

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.


தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே என்ன சந்தேகமோ ``யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்'' என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள் - என்பதையும் கண்டின்புறலாம்.

ஏ. புதுப்பொருள்

அருஞ்சொற் பொருள் கொள்வதில் கலைஞர் கண்ட நேர்மை பிறழாப் புதுமைக்குப் பின்வரும் பகுதிகள் சான்று கூறுகின்றன.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.


சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

புத்தேளிர் என்னும் சொல் புதுமை என்பதனடியாகப் பிறந்தது எனக் கொண்டு பொருள் தந்து மருட்கை தெளிவிக்கும் மாட்சிக்குக் கீழ்க் காணப்படும் பகுதிகள் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்
தேளிர் வாழும் உலகு.

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்.

புத்தே ளுலகத்தும் ஈ.ண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும் இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.

புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதைவிடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.

இனிவரும் புதிய உலகம்கூட, இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.

இவற்றுள் ஈ.ற்றில் இடம்பெற்றுள்ள பகுதி புத்தம் புதிய விழுமிய கருத்தையளிக்கும் உரையாகவும் இலங்குவதைக் காணமுடியும்.

அய். புத்தம்புது விளக்கம்

புதுமை மணங்கமழும் அத்தகைய வேறு சில பொருளுரைகட்கு,

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம்கூட நிலைத்து நிற்காது.

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். இவற்றுள், சொற்களைச் சிதைக்காமலும், மாற்றாமலும் பொருள் கண்டுள்ள நயம் போற்றத்தக்கதாக உள்ளது.

ஒ. நுண்மாண் நுழைபுலம்

கலைஞரின் நுண்மாண் நுழைபுலத்துக்கு,

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடிவிடும் என்னும் உரை சான்றாகத் திகழ்கிறது.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.

என்னும் குறள் கருத்தை இதனுடன் இணைத்துப் பார்த்தால் கலைஞரின் புலமைப் செழிப்புப் பளிச்சிடவதைக் காணமுடியும்.

6. நன்றி

திராவிட மறுமலர்ச்சி ஏற்பட்டுத் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்கு முன்னால், `இதற்கிணையாகக் கூறக்கூடிய பொது அறநூல் பிறிதேதுமில்லை' என்று இன்றும் சிறப்பித்துக் கூறப்படும் திருக்குறள் தான் பெற்றிருக்க வேண்டிய செல்வாக்கைப் பெற முடியாமல் ஒதுக்கப்பட்டே கிடந்தது. இதற்குப் பல காரணங்களுண்டு. அவற்றில் ஒன்று அது பொதுவாக மக்களாலும் சிறப்பாகத் தமிழர்களாலும் பின்பற்றப்படும் நூலாக ஆகாமைதான். அதுபற்றிப் பேசுவதும் எழுதுவதும் தவிர அதை வாழ்க்கை நேறியாகக் கொண்டு வாழ்வோர் இன்றும் எத்தனை பேர்? அவ்வாறு திருக்குறளை வழிக்காட்டியாகக் கொள்ளாமைக்கும் சில காரணங்களுண்டு. அவற்றுள் ஒன்று ஒவ்வொரு குறளும் சுட்டிக்காட்டும் நெறியைத் தெளிவாகச் சுட்டி வரையறுத்து அது இது தான் என இன்றைய தமிழனுக்குப் புரியும் வண்ணமும், புரிந்து உளங்கொள்ளும் வண்ணமும் அமைந்த உரையின்மையே அக்குறையைப் போக்கவும் எழுந்ததே கலைஞர் உரை. கலைஞர், வள்ளுவர் கோட்டமமைத்ததும், குறளோவியம் தீட்டியதும் போல் இக்குறள் உரை வகுத்ததும் குறள் நெறி பரப்பும் பணியில் குறிப்பிடத்தக்க விழுமிய பணியாக அமைந்துள்ளது. பரிமேலழகர் முதலிய பழைய உரைகாரர்களும் திரு.வி.க., புரட்சிக்கவிஞர், மு.வ. போன்ற புத்துரைகாரர்களுமாகிய உரையாசிரியர் பற்பலருள் கலைஞர் தம் பணியால் தனித்துச் சிறக்கிறார்.

தொல்காப்பியரின் `அகர முதல னகர இறுவாய்' என்னும் கூற்றுக் கிணங்கத் திருக்குறள் `அ' கரத்தில் தொடங்கி `ன' கரத்தில் முடிவதைப் போன்றே கலைஞருரையும் `அ' கரத்தில் தொடங்கி `ன' கரத்தில் முடியும் நலம் அறிந்து மகிழத்தக்கது.

இவர் மரபுப் பொருள், சொற்பொருள், தெளிவுப்பொருள், சுருக்கப் பொருள் என்பன போன்ற முறையில் பொருள் கூறிச் செல்லாமல் இக்காலத் தமிழன் ஒரு குறளைப்படித்தால் எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை இற்றெனக் கிளந்து, தெற்றெனக் காட்டுவதையே தம் உத்தியாகக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது. பரிமேலழகர், திரு.வி.க. போன்ற சான்றோர் உரைகளெல்லாம் அவற்றுக்கேற்ற வகையில் பயன் விளைத்துள்ளன; இனியும் பயன் விளைக்க வல்லன; நம்மால் என்றும் பேணிப் போற்றத்தக்கன என்பதில் சிறு கருத்து வேறுபாடும் இல்லை. அவ்வாறே கலைஞர் உரையின் தேவை குறித்தும் கருத்து வேறுபாடு எழ இடம் இல்லை. தந்தை பெரியாரைப் புரட்சிக் கவிஞர் `மக்கள் நெஞ்சின் மலிவுப்பதிப்பு' என்று சிறப்பித்து சொன்னார். அதையே நான் இங்கும் பொருத்திச் சொல்ல விழைகிறேன். திருக்குறள் கலைஞர் உரையும், மக்கள் நெஞ்சின் மலிவுப்பதிப்பாக வெளிவருகிறது. இச்சிறப்புப் பதிப்பை வெளியிடும் இத்திருப்பணியில் எனக்கும் ஒரு நுண்கூறு கிட்டியமை குறித்து எண்ணி எண்ணிப் பெருமை யெய்துகிறேன். எனக்கு இவ்வரிய வாய்ப்பை நல்கிய கலைஞர் அவர்களுக்கு என் நன்றியுணர்வைப் புலப்படுத்திக் கொள்கிறேன். மேலும் இந்நன்னூலை வெளியிடும் வாய்ப்பைத் திருமகள் நிலையத்துக்கு அளித்த கலைஞர் அவர்களின் அன்புள்ளத்திற்குப் பதிப்பகத்தாரின் நன்றியுணர்வை அவர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்வதும் என் கடமையாயிற்று.

இந் நூலை வாங்கிப் படித்து மனத்தில் பதித்துக் கொள்வதோடு இயன்றவரை தேவையான இடத்திலேல்லாம் பின்பற்றுமாறும் நான் தமிழ்மக்களை அன்புடன் வேண்டுகிறேன். இக்கருத்துகளைத் தமிழன், முரசொலி ஆகிய நாளேடுகளில் எழுதியதற்கும், இப்போது அவற்றைத் தொகுத்து இந்நூலாக வெளியிடுவதற்கும் கலைஞர் எதிர்பார்க்கும் பயன் அதுவேயாகும். அந்நன்றியைத் தமிழகம் செய்ய வேண்டும் என்பது எனது வேணவாவாகும்.பருவந்து பாழ்படுதல் இன்று.

3 comments:

அறவாழி கிருபானந்தன் said...

I like Kalaignar Urai. it is the best explanation in this current world.

Ravikumar said...

வாழ்க்கைத் துணைநலம் மற்றும் பெண் வழிச்சேறல் என்ற இரு அதிகாரங்களிலும் பெண்களை எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி எழுதியிருக்கிறார் வள்ளுவர். அந்தக் குறள்களுக்கெல்லாம் முற்றிலும் பொருந்தாத பொருள் எழுதி வள்ளுவரை பெருந்தகையாகக் காட்ட முயற்சிக்கிறார் திரு கருணாநிதி.

ஆனால், குறள் 167-ல் அந்த மாதிரி பாச்சா எல்லம் பலிக்கவில்லை. திருமகள், மூதேவி என்றெல்லாம் வள்ளுவர் எழுதியதை மாற்றி புனையத் தெரியவில்லை கருணாநிதி அவர்களுக்கு.

திருமந்திரம் உபதேசம் விளக்கம் said...

திருக்குறள் வணக்கம்.

இல்லறவியலுக்கு பிறகு தான் ஒருவனுக்கு துறவரம் ஆன்மீகம் எல்லாமே.

தெய்வ புலவர் பெண்களைப் பற்றி இழிவாக கூறவில்லை. ஆண்களுடைய குணத்தை நன்கு அறிந்த திருவள்ளுவர் பெண்களின் குண நலன்கள் பற்றி எழுதியுள்ளார் அதற்கு தகுந்தவாறு ஆண்கள் நடந்து கொள்ள வேண்டும். கடவுள் ஆண் பெண் என ஒவ்வொரு உயிரினங்களுக்கும் புல் பூண்டு மரம் செடி கொடிகளில் இருந்து இரண்டு வகையை படைத்துள்ளான்.

பெண்களிடத்தில் உள்ள பொதுவான குணநலன்களில் இதுவும் ஒன்று என்று எச்சரிக்கை செய்கிறார்.

அது ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவம் மனநிலைப்படி எழுதியுள்ளனர்.

பெண் இல்லாமல் இந்த உலகத்தில் மக்கள் தொகை பெருக்கம் இல்லை.

ஆண்கள் அரங்கேறியுள்ளது ஒழுக்க நெறியை கடைபிடித்தால் பெண்கள் தவறான பாதையை கையில் எடுக்க மாட்டார்கள்.

எனவே தெய்வப்புலவர் தவறாக எதுவும் குறிப்பிடவில்லை எல்லாம் அவரவர்களுடைய மனநிலையை கொடுத்தது
நன்றி