புலியூர்க் கேசிகன் முன்னுரை

Posted Print Friendly and PDF

புலியூர்க் கேசிகன் முன்னுரை

தமிழ் மொழிக்கு வளமை சேர்த்த ஒரு நூல்; தமிழர்க்கு வாழ்வியல் உண்மைகளை உணர்த்தும் ஒரு நூல்; தன தோற்றத்தால் தமிழ் நாட்டுக்கு உலகப் பெரும் புகழைப் பெற்றுத்தந்த சிறந்த நூல், திருவள்ளுவரின் திருக்குறள்!

திருக்குறள் பற்றி பேசாத புலவரில்லை; எழுதாத அறிஞர், எழுத்தாளர் இல்லை.

பள்ளிப் பருவத்திலும் திருக்குறள் படிக்கப்படுகின்றது. பருவம் வளர வளர அதுவும் நுட்பமாகக் கற்கப்படுகின்றது. அதற்குள்ள சிறப்பே அதுதான். அது எல்லாப் பருவத்தாருக்கும் வேண்டிய விழுமிய நூல்.

திருவள்ளுவர் சித்தர்; சகல ஞானமும் தெளிந்த ஞானி; உலகம் உய்யும் வகை உதவிய அருளாளர்; ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தவர்.

திருக்குறளுக்குப் பலர் உரையாசிரியர்கள். பழைய உரையாசிரியர் பத்துப் பேர்; பின் வந்தவர்களோ எவ்வளோ பேர். இவர்களின் உரைகளுள் பொருள் விளங்கும் வகையாலும் உரைகூறும் நயத்தாலும் சிறந்தவை பல.

திருக்குறளில்லாத தமிழர் வீடு இருக்கக்கூடாது! திருக்குறள் படியாத தமிழனும் இருக்கக் கூடாது!

இந்த எண்ணமே என்னை புதிய உரையமைப்பினை எழுதத் தூண்டியது.

தமிழர் என்பார் அனைவரியிடமும் இந்நூற் பிரதியொன்று இருக்கும் நிலை ஏற்பட்டால், அதுவே என் உழைப்புக்கு நல்ல பயனாக விளங்கும்.

வாழ்க தமிழ்! வளர்க குறள்நெறி!

11.6.1976