கலைஞர் முன்னுரை

Posted Print Friendly and PDF

இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈ.டுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நானறியாதவனல்லன் முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு என்னை ஆட்கொண்டது. அதனை நிறைவேற்றி மகிழ, `முரசொலி' நாளேட்டில் ஒவ்வொரு நாளும் நான் எழுதிய திருக்குறள் உரைகளின் தொகுப்பே இந்தநூல்.

வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள சொல்லுக்கு இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மை நிலையைக் கடைபிடித்து, நான் எண்ணுவது போல் அவர் எண்ணினாரா என்று நோக்காமல் அவர் எண்ணி எழுதியது என்ன என்பதை அறிவதில் மட்டுமே அக்கறை கொண்டு என் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டியவரையில் இந்தப் பொன்னாடையை நெய்துள்ளேன்.

``கடவுள் வாழ்த்து'' எனும் அதிகாரத்தலைப்பை ``வழிபாடு'' எனக் குறித்துள்ளேன். வள்ளுவரைக் கடவுள் மறுப்பாளர் அல்லது கடவுள் நம்பிக்கையாளர் எனும் வாதத்திற்குள் சிக்கவைக்க நான் விரும்பவில்லை. ``வழிபாடு'' எனும் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களுக்கு நான் எழுதியுள்ள உரைகளைக் கொண்டு இதனை உணரலாம்.

மற்றும் நான் தரவேண்டிய விளக்கங்கள் பலவற்றை இந்நூலினை வெளியிடும் திருமகள் நிலையத்தார் சார்பாகப் பதிப்புரை தீட்டியுள்ள முனைவர் திரு.நன்னன் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். பதிப்புரையை ஏறத்தாழ ஒரு மதிப்புரையாகவே எழுதியுள்ள தமிழறிஞர் நன்னன் அவர்கட்கு என் நன்றி.

அணிந்துரையை அழகு தமிழ்க் கவியுரையாகவே வடித்துள்ள இனமானஏந்தல் பேராசிரியப் பெருந்தகை அன்பழகனார் அவர்களுக்கு என் நன்றி உரியதாகுக.

தமிழ்க்கனிப் பதிப்பகத்திற்கு உரிமையுடைய இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட முன்வந்து அழகுறத் தமிழ் மக்களின் பால் வழங்கியுள்ள திருமகள் நிலைய உரிமையாளர் திரு.இராமநாதன் அவர்களுக்கும் நன்றி சொல்லி, இந்நூலை என் தமிழுக்குக் காணிக்கை ஆக்கித் தமிழ் மக்களுக்குப் படைக்கின்றேன்.

அன்புள்ள,
மு.க.

``வாழ்க்கையில் பல நாட்கள் திருநாட்களாக அமைகின்றன. அந்தத் திருநாட்களில் எல்லாம் சிறந்த திருநாளாக, திருவிழா நாளாக அமைந்தது இந்த நாள், இந்த நாள் என்னுடைய களைப்பையும், எல்லாவிதமான துன்ப துயரங்களையும் துடைத்திருக்கின்ற நாள்''.

(1996-இல் நடந்த திருக்குறள் உரை வெளியீட்டு விழாவில்)