நீங்கள் இருக்கும் பகுதி:
முகப்பு >
பயனில சொல்லாமை
> அறத்துப்பால் - இல்லறவியல் - பயனில சொல்லாமை
குறள் 191: பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
கலைஞர் உரை: பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.
மு.வ உரை:கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
Translation: Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.
Explanation: He who to the disgust of many speaks useless things will be despised by all.
குறள் 192: பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
கலைஞர் உரை: பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
மு.வ உரை:பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
Translation: Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more.
Explanation: To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.
குறள் 193: நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
கலைஞர் உரை: பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
மு.வ உரை:ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
Translation: Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.
Explanation: That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue".
குறள் 194: நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
கலைஞர் உரை: பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
மு.வ உரை:பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
Translation: Unmeaning, worthless words, said to the multitude,
To none delight afford, and sever men from good.
Explanation: The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.
குறள் 195: சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
கலைஞர் உரை: நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.
மு.வ உரை:பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
Translation: Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.
Explanation: If the good speak vain words their eminence and excellence will leave them.
குறள் 196: பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
கலைஞர் உரை: பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.
மு.வ உரை:பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.
Translation: Who makes display of idle words' inanity,
Call him not man, -chaff of humanity!.
Explanation: Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.
குறள் 197: நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
கலைஞர் உரை: பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
மு.வ உரை:அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.
Translation: Let those who list speak things that no delight afford,
'Tis good for men of worth to speak no idle word.
Explanation: Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.
குறள் 198: அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
கலைஞர் உரை: அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.
மு.வ உரை:அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
Translation: The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.
Explanation: The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.
குறள் 199: பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
கலைஞர் உரை: மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
மு.வ உரை:மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
Translation: The men of vision pure, from wildering folly free,
Not e'en in thoughtless hour, speak words of vanity.
Explanation: Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.
குறள் 200: சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
கலைஞர் உரை: பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
மு.வ உரை:சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
சாலமன் பாப்பையா உரை:சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.
Translation: If speak you will, speak words that fruit afford,
If speak you will, speak never fruitless word.
Explanation: Speak what is useful, and speak not useless words.