நீங்கள் இருக்கும் பகுதி:
முகப்பு >
பொறையுடைமை
> அறத்துப்பால் - இல்லறவியல் - பொறையுடைமை
குறள் 151: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
கலைஞர் உரை: தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
மு.வ உரை:தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.
Translation: As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.
Explanation: To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.
குறள் 152: பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
கலைஞர் உரை: அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.
மு.வ உரை:வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
சாலமன் பாப்பையா உரை:தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.
Translation: Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise;.
Explanation: Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.
குறள் 153: இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
கலைஞர் உரை: வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
மு.வ உரை:வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
சாலமன் பாப்பையா உரை:வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.
Translation: The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.
Explanation: To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.
குறள் 154: நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
கலைஞர் உரை: பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
மு.வ உரை:நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.
Translation: Seek'st thou honour never tarnished to retain;
So must thou patience, guarding evermore, maintain.
Explanation: If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.
குறள் 155: ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
கலைஞர் உரை: தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.
மு.வ உரை:( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
சாலமன் பாப்பையா உரை:தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
Translation: Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.
Explanation: (The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
குறள் 156: ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
கலைஞர் உரை: தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
மு.வ உரை:தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
சாலமன் பாப்பையா உரை:தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.
Translation: Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.
Explanation: The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.
குறள் 157: திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
கலைஞர் உரை: பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.
மு.வ உரை:தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை:கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.
Translation: Though others work thee ill, thus shalt thou blessing reap;
Grieve for their sin, thyself from vicious action keep!.
Explanation: Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.
குறள் 158: மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
கலைஞர் உரை: ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.
மு.வ உரை:செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
Translation: With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.
Explanation: Let a man by patience overcome those who through pride commit excesses.
குறள் 159: துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
கலைஞர் உரை: எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.
மு.வ உரை:வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.
Translation: They who transgressors' evil words endure
With patience, are as stern ascetics pure.
Explanation: Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.
குறள் 160: உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
கலைஞர் உரை: பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
மு.வ உரை:உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.
Translation: Though 'great' we deem the men that fast and suffer pain,
Who others' bitter words endure, the foremost place obtain.
Explanation: Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.