நீங்கள் இருக்கும் பகுதி:
முகப்பு >
குறள் 1141-1150
> காமத்துப்பால் - களவியல் - அலரறிவுறுத்தல்
குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
கலைஞர் உரை: எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.
மு.வ உரை:(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை:ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.
Translation: By this same rumour's rise, my precious life stands fast;
Good fortune grant the many know this not!.
Explanation: My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.
குறள் 1142: மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
கலைஞர் உரை: அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.
மு.வ உரை:மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
சாலமன் பாப்பையா உரை:மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.
Translation: The village hath to us this rumour giv'n, that makes her mine;
Unweeting all the rareness of the maid with flower-like eyne.
Explanation: Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.
குறள் 1143: உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
கலைஞர் உரை: எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!.
மு.வ உரை:ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.
Translation: The rumour spread within the town, is it not gain to me?
It is as though that were obtained that may not be.
Explanation: Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).
குறள் 1144: கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
கலைஞர் உரை: ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்.
மு.வ உரை:எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.
சாலமன் பாப்பையா உரை:ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.
Translation: The rumour rising makes my love to rise;
My love would lose its power and languish otherwise.
Explanation: Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.
குறள் 1145: களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
கலைஞர் உரை: காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.
மு.வ உரை:காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.
Translation: The more man drinks, the more he ever drunk would be;
The more my love's revealed, the sweeter 'tis to me! .
Explanation: As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.
குறள் 1146: கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
கலைஞர் உரை: காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் யயகிரகணம்(( எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.
மு.வ உரை:காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
சாலமன் பாப்பையா உரை:நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!.
Translation: I saw him but one single day: rumour spreads soon
As darkness, when the dragon seizes on the moon.
Explanation: It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.
குறள் 1147: ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
கலைஞர் உரை: ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.
மு.வ உரை:இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
Translation: My anguish grows apace: the town's report
Manures it; my mother's word doth water it.
Explanation: This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.
குறள் 1148: நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
கலைஞர் உரை: ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.
மு.வ உரை:அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.
Translation: With butter-oil extinguish fire! 'Twill prove
Harder by scandal to extinguish love.
Explanation: To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.
குறள் 1149: அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
கலைஞர் உரை: உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.
மு.வ உரை:அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
சாலமன் பாப்பையா உரை:அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?.
Translation: When he who said 'Fear not!' hath left me blamed,
While many shrink, can I from rumour hide ashamed?.
Explanation: When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.
குறள் 1150: தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
கலைஞர் உரை: யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்.
மு.வ உரை:யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
சாலமன் பாப்பையா உரை:நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.
Translation: If we desire, who loves will grant what we require;
This town sends forth the rumour we desire!.
Explanation: The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).