இந்திரா பார்த்தசாரதி (http://www.uyirmmai.com)
‘காலம்' என்ற கருத்துக் குறித்து, ஸ்டீஃபன் ஹாக்கிங் என்ற தலைசிறந்த விஞ்ஞானி ‘காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் எழுதியுள்ளார். 'கால'த்தைப் பற்றிய விஞ்ஞானப் பூர்வமான பல கோட்பாடுகளை விதம் விதமான பரிமாணங்களில் ஆராய்கிறார்.
இதைப் படிக்கும் போது எனக்குக் குறள் நினைவுக்கு வந்தது.
‘நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.'
இதற்குப் பரிமேலழகர் எழுதியுள்ள உரையை உடன் வைத்துப் படித்தல் அவசியம். ஏனெனில், குறளுக்கு நிகரான பொருட்செறிவு உடையது அவர் உரை.
சரி, இக்குறளின் பொருள் என்ன? அதை முதலில் பார்ப்போம். இக்குறள் ‘நிலையாமை' என்ற அதிகாரத்தில் வருகிறது. ஒரு பெரிய வாள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அது கண்ணுக்குத் தெரியவில்லை. அது மிகவும் கூர்மையான வாள். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் அந்த வாளின் கண் தொடர்ந்து வெட்டப்பட்டுக் கொண்டே வருகிறது..அறுபடுவதும் நம் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒருநாள் உயிர் இல்லாமல்போகும்போதுதான், கண்ணுக்குத் தெரியாத வாளில், உடம்பு தொடர்ந்து அறுபட்டுக் கொண்டு வந்திருக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது.
இந்த வாளின் பெயர் என்ன? ‘காலம்' என்கிறார் வள்ளுவர். காலம் அருவப் பொருள். உலகக் காரியங்கள் நடைபெறுவதற்காக ‘காலத்தை' நாம், ‘நாள்' என்றும் ‘இரவு' என்றும் கூறு போட்டுக் கணக்கிடுகிறோம். இவ்வாறு கூறு போட உதவுவது, சூரியனின் உதயம், சூரியனின் அஸ்தமனம் போன்ற கண்ணுக் தெரியும் நிகழ்வுகள். ‘காலம்' என்ற அருவமான 'வாள்', 'நாள்' என்ற மயக்கத்தை நமக்குத் தோற்றுவிக்கின்றது. அவ் ‘வாளில்' அறுபட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று உணராமல், பொழுது அவ்வளவில் இன்பமாகக் கழிகின்றது என்று மகிழ்பவர் பலர். இவ்வாறு அறுபடுவதை உணர்பவர் மிக அரியவர்களாகத்தாம் இருக்கின்றார்கள்.
பரிமேலழகர் உரையைப் பார்ப்போம்: "நாளெ'ன்று அறுக்கப்படுவதொரு கால வரையறையைப் போல் தன்னைக் காட்டி, ஈர்ந்து செல்கின்ற வாளின் வாயது உயிர், அஃது உணர்வாரைப் பெறின். ‘காலமென்னும் அருவப் பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுதல்லது, தானாகக் கூறுபடாமையின், ‘நாளென்று ஒன்று போல்' என்றும், அதுதன்னை வாளென்று உணரமாட்டார் நமக்குப் பொழுது போக நின்றதென்று இன்புறுமாறு ‘நாளாய்' மயக்கலிற் ‘காட்டி' யென்றும், இடைவிடாதி ஈர்தலின் வாளின் வாயதென்றும், அது ஈர்கின்றமையை உணர்வார்
அரியராகலின், ‘உணர்வார்ப் பெறின்' என்று கூறினார்.'உயிர்' என்ற சாதி ஒருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ‘ஈரப்' படுவது அதுவே யாகலின், ‘வாள்' என்பது ஆகுபெயர்.”
பரிமேலழகர் இன்று அரசியல் காரணங்களினால், பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனால், பரிமேலழகர் உரை இல்லாமலிருந்தால், இக்குறளைப் புரிந்து கொண்டிருக்கமுடியுமா என்று யோசிக்க வேண்டும். பகவத் கீதையைப் போல், திருக்குறளும் எல்லா தலைகளுக்கும் பொருந்துகின்ற குல்லாய். அதனால்தான், அவரவர்கள் தங்கள் அரசியல் கொள்கைகளுக்கேற்ப, குறளுக்கு உரை கண்டு, இன்று, பரிமேலழகரைத் தூற்றுகிறார்கள்.
குறளை நுனிப்புல் மேய்கின்ற உரைகாரர்கள், ‘ நாள் என்பது நம் வாழ்நாளை அறுக்கிற வாள்' என்பார்கள். மணக்குடவர் கூறும் உரையும் இதுதான். பரிமேலழகர் இதை மறுக்கிறார்.'காலம்' என்பதுதான் ‘நாளெ' ன ஒன்று போல், கண்ணுக்குப் புலனாகாத வாள், அதன்கண் அறுபடுவது உயிருடைய உடம்பு என்கிறார் அவர். ‘நாளென' என்ற சொல்லாட்சியில், 'என'என்பது, பெயர் அன்று, இடைச்சொல் என்கிறார் பரிமேலழகர். அதாவது, 'நாளென்பது' என்று, ‘என'வைப் பெயராகக் கொண்டு, ‘நாளென்பது' என்று பொருள் கொள்ளக்கூடாது, ‘நாளென' என்று, ‘என'வை இடைச் சொல்லாகக் கொள்ள வேண்டுமென்கிறார் பரிமேலழகர். பரிமேலழகர் ஒருவர்தான் வள்ளுவரின் இதயத்தை நன்கு உணர்ந்தவர். அதனால்தான், வள்ளுவரின் சொற்சிக்கனத்தைக் கையாண்டு, ஆழமான உரையை அவரால் எழுத முடிந்திருக்கிறது.
‘உணர்வார்ப் பெறின்' என்பதற்கு அவர் மிக நுணுக்கமாகப் பொருள் உரைக்கிறார். நிகழும் கணமே சொர்க்கம், அதை அனுபவிப்பதைவிட்டு வரும் கணத்தைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறுவது போல,'epicurean' கோட்பாட்டைத் தேர்ந்தெடுத்து வாழ்பவர்கள் பலர். ஆனால், வாழ்க்கையின் அருமையை உணர்ந்து அது மற்றவர்க்குப் பயன்பட வாழ்கிறார்கள். ‘பெறின்' என்பது அவ்வாறு வாழ்கின்றவர்கள், ‘அரியராதலின்' என்கிறார் பரிமேலழகர்.
‘காலம்' என்பது நாமே நம்முடைய சௌகரியத்துக்காக உண்டாக்கிக்கொண்ட ஒரு தவிர்க்க முடியாத மானசீக ஏற்பாடு என்கிறது இன்றைய விஞ்ஞானம். “வெளி' (space)யுடன் சேர்ந்து இது நான்காவது பரிமாணம்( fourth dimension) ஆகின்றது" என்றார் ஐன்ஸ்டீன். பரிமேலழகர் கூற்று, ‘காலம்' என்ற மானசீகத்தை எவ்வளவு துல்லியமாகப் புலப்படுத்துகின்றது பாருங்கள்!
‘'நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு'
‘நேற்றிருந்தான், இன்று அவன் இல்லை என்று சொல்லும் நிலையாமையை மிகுதியாக உடையது இவ்வுலகம்' என்பது இதன் பொருள்.
வாழ்க்கையின் மீது ஓர் எதிர் மறை உணர்வை ஏற்படுத்துவதற்காக வள்ளுவர் இக்குறளை எழுதவில்லை. ஆனால் ‘நிலையாமை'யை உணர்ந்து, மனிதன் ஆக்கப்பூர்வமாகச் செயல் படவேண்டும் என்பதைக் கூறத்தான் வள்ளுவர் இக்குறளை எழுதியுள்ளார். ‘ஈண்டு உண்மை ( ‘உளனொருவன்') பிறத்தலையும், இன்மை, (‘இன்றில்லை') இறத்தலையும் உணர்த்தி நின்றன என்கிறார் பரிமேலழகர்.
‘பிறப்பு எதேச்சை, இறப்பு உறுதி' என்பார்கள், இருத்தலிய வாதிகள்.(Existentialists). இதனால், வாழும் காலத்துக்குள், நம் ஆற்றலின் எல்லையை முழுதுறும் உணர்வதற்கு நாம் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.ஏன்?
‘வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு'
‘நின்ற நீரின் அளவினவாம் தாளினது நீளங்கள்; அதுபோல் மக்கள்தம் ஊக்கத்தின் அளவினவாம் அவர் உயர்ச்சி', என்கிறார் பரிமேலழகர்.
‘உள்ளம்' என்றால் இங்கு ஊக்கத்தை அல்லது முயற்சியைக் குறிக்கின்றது. இதைத்தான் ‘நம் ஆற்றலின் எல்லையை உணர்வதற்கு நாம் வாழ்க்கையில் மேற்கொள்ளவேண்டிய அகப் பயணம்' என்கிறார்கள் இருத்திலிய வாதிகள். பொருள் படைப்பதற்கு இவ்வாற்றல் பயன்பட வேண்டும் என்று ஒரு நடைமுறைத் தத்துவத்தை எடுத்துக் கூறுகிறார் பரிமேலழகர். ‘உயர்தல், பொருள் படைத்தலால் மிகுதல்' என்பது அவர் வாக்கு. ஆகவே வாழ்க்கை நிலையாமையை உணர்ந்து, நாம் நடைமுறைச் சிந்தனை எவ்வாறு வேண்டுமென்று, வள்ளுவக் கோட்பாட்டுக் கேற்ப உரை எழுதுகிறார் பரிமேலழகர்.
மற்றொரு குறள்.எல்லோருக்கும் மிக அறிமுகமான குறள்தான்.
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்'.
பொருள் வெளிப்படை. ‘உழுதுண்டு வாழ்கின்றவர்களே வாழ்கின்றவர்கள் ஆவார்கள்.
மற்றவர்கள் பிறரைத் தொழுது வாழ்கின்றவர்கள் ஆகிறார்கள்'.
பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். ‘யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே தமக்கு உரியராய் வாழ்கின்றவர்; மற்றையரெலாம் பிறரைத் தொழுது அதனால் தாமும் உண்டு அவரைப் பின்செல்கின்றவர்'.
‘தாமும் உண்டு' என்பதில் ‘உம்'மையைக் கவனித்தீர்களா? அதாவது, மற்றவர்களுக்கு உணவளிப்பதுதான் மாந்தர்க்கு முதல் கடமை. எஞ்சியதை உண்பது மனித தர்மம்.
பரிமேலழகர் மேலும் கூறுகிறார்:' தாமும் மக்கட் பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர்பின் செல்பவர் தமக்குரியர் அல்லர் என்பது கருத்து'.
அதாவது, உண்மையான மக்கட் பிறப்பினர் உழுதுண்டு தம் தனிமனிதச் சுதந்திரத்தைப் பேணி வாழ்கின்றவர்கள். மற்றவர்கள், தம் தனிமனிதச் சுதந்திரத்தைப் பேணாமையினால்,. உறுப்பு ஒற்றுமையினால் மக்கட் பிறப்பைச் சார்ந்தவர்கள் என்று கூறலாமேயன்றி, உண்மையான மக்களல்லர்; தமக்குரியரல்லாத அடிமைகள். வள்ளுவர் உறுப்பு ஒற்றுமையை அடிப்படையாக வைத்து, அங்கதமாக எழுதியுள்ள குறள்களும் உண்டு.
‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்'
‘இதென்ன ஆச்சர்யம்! கயவர்களும் மனித்தப் பிறவியைப் போல் தோற்றம் அளிக்கின்றார்களே! இரண்டு கண்கள், இரண்டு காதுகள்! இரண்டு கைகள், இரண்டு கால்கள்! இந்தமாதிரியான ஒப்புமையை நாம் வேறெங்கும் பார்த்ததேயில்லை!' நாசூக்கான அங்கதத்தின் உச்சம் இதுதான்! ‘கயமை' என்பது இன்று ‘அயோக்கியர்கள்' என்ற பொருளில் வழங்குகிறது. வள்ளுவர் ‘philistine' என்ற பொருளில் வழங்கியிருக்கலாமென்று தோன்றுகிறது. ‘Philistine' என்பதற்கு அகராதிப் பொருள், ‘a crass prosaic individual guided by material rather than intellectual,spiritual or artistic values'.அடுத்த குறளை நோக்கினால் இக்கருத்து வலியுறும்.
‘நன்றாறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்'
‘கயவர்கள், தமக்கு வேண்டியன என்னவென்று அறிந்து, ஒரு குறுகிய வட்டத்துக்குள் தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர் என்பதால், மேலும், மேலும் அறிய விழைகின்றவர்களைக் காட்டிலும் கொடுத்து வைத்தவர்கள். அறிய வேண்டுமென்ற ஆவலுமில்லை, அதனால் மனக் கவலையுமில்லை..'
பரிமேலழகர், ‘கீழோர்' என்று குறிப்பாக உணர்த்துவது இப்பொருளைத்தான். அதாவது, தமக்கு உறுதியனவற்றை அறியமாட்டாதவர்கள் என்ற பொருள். ‘அறியுந்தோறும் அறியாமை கண்டற்றால்' என்கிறார் வள்ளுவர் வேறொரு இடத்தில். அறிய, அறியத்தான், நமக்குத் தெரியா விஷயங்கள் எத்தனை இருக்கின்றன என்ற நம் அறியாமையைப் பற்றிய உணர்வு நமக்கு ஏற்படும். இந்தக் கவலை கயவர்களுக்கு அறவே இல்லை. இதுவே அவர்கள் ‘மகிழ்ச்சி' க்குக் காரணம். பரிமேலழகர் உரையில்லை என்றேல், வள்ளுவம் புரியாது.
32 comments:
வணக்கம், திருக்குறளை உலகிற்கு விளக்கமுடன் அறிமுகம் செய்தவர் பரிமேலழகர் என்றால் அது மிகை ஆகாது.
it is wonderful
Nice..!
thirukkural is something telling how to live a life after existence of rama.As a human,im following steps that thought and showed in kurral.nandri.thiruvalluvare nin pugal valge.frm :malaysia.
DEAR SHRI INDIRA PARTHASARATHY
I AM ARDENT FAN OF YOUR NOVELS AND
HAS READ ALMOST ALL OF THEM. THEIR
FORM AND CONTENT USED TO ENTHRALL MY AESTHESTIC INNER SELF. I FULLY
CONCUR ABOUT YOUR CONCLUSIONS THAT
WITHOUT PARIMAEL ALAGAR THIRUKKURAL
COULD NOT BE CORRECTLY UNDERSTOODL.
PLEASE WRITE A FULL BOOK ON KURAL
AND PARIMAELALGAR USING YOUR VAST
KNOWLEDGE OF TAMIL. IT WILL BE A
BEST SELLER AND WILL GIVB YOU
ENORMOUS SATISFACTION. R SRIDHARAN
Thirukural is one of the best book of the world as well as my life guide.....
Thanks to publisher..
Good
thirukkuralal nan tamilan yendru perumaippadukiren
வணக்கம், திருக்குறளை உலகிற்கு விளக்கமுடன் அறிமுகம் செய்தவர் பரிமேலழகர் என்றால் அது மிகை ஆகாது.Vaalviyal nool, manithanin vaalkaikku adippadai noolaahum.Mihavum perumaipadukiren.Nandri!
வணக்கம். I would like to know how many உவமை (Comparision) handled in thirukkural by thiruvalluvar? Anyone can tell?
Over 240 Uvamaigal are there . I have written a book on this (288 Pages )aThirukkural Uvamai nayam by Kavitha publications Chennai..
Also see the website www.voiceofvalluvar.org
c.rajendiran@gmail.com
Dr. Venkatachalam, retired professor of Psychology has written a commentary on Thirukural. This is done psychological point of view. For approximately 600 kural he has given a new commentary which is different one from Parimaelazhagar. How can we reach the webmaster of this to write a article about Venaktachalms book here. Please help.
Learn all Thirukkural to lead a more better life, which you can get free without spending any cost. It guides through at all times of our life.
Nice to See Thirukkural in Website :):)
This is not written by human.......
நூலாசிரியரை விடவும் நூலில் கண்ட கருத்துக்களைத் திரித்த உரையாசிரியரை உயர்த்தும் இ.பா அவர்களின் பார்வை திருத்தப்பட வேண்டியது.
'இம்மைக்கு' என்றால் நேரடியாக 'இன்னைக்கு' எனச் சொல்லாமல் இந்தப் பிறவி என்று வேதக் கருத்தைத் திணித்துத் திருக்குறளை திரித்தவர் பரிவமலழகர். இது இபா வுக்குத் தெரியவில்லை என்பது சரியா?
கடவுள் வாழ்த்து என்ற தலைப்புக் கொடுத்த பரிமேலழகர் கவனிக்கவில்லையா? அந்த அதிகாரத்திலோ, திருக்குறள் முழுயமயிலுமோ கடவுள் என்ற சொல்லே கையாளப்படவில்லை என்பது தெளிவு.
'இறைவன்' என்ற சொல் எப்படிக் கடவுளைக் குறிக்கும்.அரசன், தலைவன் என்றல்லவா பொருள் கொள்ள வேண்டும். இறை என்றால் வரி. வசூலிக்கும் வரி, இறைக்கு உரியவன் அரசன், தலைவன் தண்டல் நாயகன்.
உண்மையான தமிழ் உரை காண
www.tamilinkural.blogspot.in
விரைவில் அறத்துப்பாலுக்கான தமிழப் பண்பாட்டினை ஒட்டிய உரை வெளிவரும்
H.V.விஸ்வேஸ்வரன்
நாமக்கல் கவிஞர் வள்ளுவர் திடுக்கிடுவார் என்ற புத்தகத்தை பரிமேலழகரை விமர்சித்து எழுதியுள்ளார். படியுங்கள்.
அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமுக நிலைமை பொருத்து எழுதியுள்ளதாக தெரிகிறது. இப்போது உரை எழுதுபவர்கள் இன்றைய கால நிலைமை கருத்தில் கொண்டு எழுதுகின்றனர். இன்றும் பார்பன மேலாதிக்க மனோபாவத்தில் எழுதினால் எடுபடுமா? எதிர் குரல் எழுவது இயற்கையே. ஆக எழுதிய திருவள்ளுவரே வந்து இன்றைக்கு பொருந்தாத கருத்துகளை கூறினால் அவதி படுவார்.
தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம் (பரிமேலழகர் இங்கே திருத்தப்படுகிறார்)என்ற என் நூலைப்படியுங்கள். மநு,கீதை போன்ற பிற்கால நூல்களும் திருக்குறளை ஒட்டிப் பொருளைத் திரித்து எழுதப்பட்டவை என்பது விளங்களம். இந்த நூல் சென்னையில்
பாரதி புத்தகாலயம் ,7,இளங்கோ தெரு,தேனாம்பேட்டை(அண்ணா அறிவாலயம் பின்புறம்)
பனுவல் புத்தக நிலையம் திருவள்ளுவர்சாலை திருவான்மியூர்
ஆகிய இடங்களில் கிடைக்கும்.
இணையத்தில் www.amazon.in, www.flipkart.com, www.infibeam.com இணையதளதங்களில் வாங்கலாம்.
வெளிநாட்டு அன்பர்கள் www.amazon.com இணையதளத்தில் பெறலாம்.
I entirely agree with Thiru.Vichan Hari's comments.Paimelazhagar's urai can never be put even at par with KURAL. Then , how can it be given prominence over the original?
CP.Ramaswami.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை வைத்துக்கொண்டு இவர்கள் நடத்தும் 'திராவிட' வியாபாரத்திற்கு பார்ப்பான் பரிமேலழகன் எழுதிய உரை தடையாக இருக்கிறதே என்ற வயிற்றெரிச்சல் இவர்களுக்கு.
பரிமேலழகரை ஏன் குறை கூற வேண்டும்? திருவள்ளுவரே ஒரு ஆரிய பார்ப்பான்தான்.
இல்லாவிட்டால், 'பார்ப்பான் கற்ற வேதத்தை மறந்தாலும் மறுபடியும் கற்றுக்கொள்ளலாம்; ஆனால், ஒழுக்கம் தவறக் கூடாது; அப்படி தவறினால் அவன் பிறப்பு கெடும்' என்று எழுதியிருப்பாரா? (குறள் 134)
யாரும் ஒழுக்கம் தவறக் கூடாது; தவறினால், மனிதனாக இருப்பதற்கே அருகதை இல்லை என்றுதானே வள்ளுவர் எழுதியிருக்க வேண்டும்? அதென்ன, பார்ப்பானுக்காக ஒரு குறள்?
மற்றவர்கள் ஒழுக்கம் தவறலாமா?
அந்தக் குறளின் முதல் சொல்லான "மறப்பினும்" என்பதில் உள்ள 'உம்' பார்ப்பான் வேதத்தை மறக்கவே கூடாது என்பதைத்தானே வலியுறுத்துகிறதே? வேதம் என்ன அவ்வளவு உயர்ந்ததா? பார்ப்பான் வேதம் ஓதினால் என்ன, அதை மறந்தால் என்ன? தமிழனான வள்ளுவர், பார்ப்பான் வேதத்தை மறப்பதைப் பற்றி எதற்கு கவலைப்பட வேண்டும்?
பொதுவான ஒழுக்கத்தைப் பற்றி கூற வந்தவர், பார்ப்பானைப் பற்றியும், வேதத்தைப் பற்றியும் உயர்வாகக் கூறுவானேன்?
ஏனெனில், வள்ளுவரும் உள்ளத்தளவில் ஒரு ஆரியப் பார்ப்பான்தான்.
Sociologically speaking every theorist is to be criticised, only then new concepts will evolve. To evolve is is humanism, it is development. For heavens sake,do not try to paint Theiva Pulavar Thiruvalluvar as a sole property of a particular caste and community. Of course , caste eye-view has been genetically embedded in us. Let us talk his theories which has stood for over two hundred decades. Can any of us try to crate history by bringing out one page article which can stand for a decade. For people who spend their time talking about the caste, has any of us know his caste authentically? Can any of you pin point a literature which has dealt with multi facial aspects and has with stood with credibility for such a long period? He starts the firstkural with the first letter in Tamil, "Agara muthala ..." and the last 1330 kural ends with the last letter in Tamil .".. perin".
காலம் குறித்த பரிமேலழகரின் கருத்து உண்மையே,ஆனால் ஆய்வாளரின் கருத்து முடிபு..
”பகவத் கீதையைப் போலத் திருக்குறளும் என்றது நன்றன்று. குமரன் ரெங்கசாமி.
தோழரே! வள்ளுவர் குறிப்பிட்ட "அந்தணன" பார்ப்பனன் அல்ல! அந்துவன் என்றால் வீரன் அந்தனன் என்றால் அறம் செய்தவன். ந்ல்ல அறம் செய்த அனைவரும் அந்தணரே! பார்ப்பனன் வந்தேரி ஆரியன் ஆனாலும் இன்றைய இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் திராவிடர்களே! எஞ்சியோர் திராவிடர் ஆரியன் கிரேக்கர் அரேபியர் மங்கோலியர் கலப்பினத்தவரே! தமிழ் அய்யஙகாரில் மண்டயம் அய்யங்கார் (கருத்தவர்கள்) பெரும்பாலும் திராவிடர்களே! அவர்களை அய்யங்காராக்கியர் பெரும்பூதூர இராமானுஜர்..
ஆய்வாளர் உள்ளக்கிடக்கையில் பார்பனியம் தலைதூக்குகிறது!வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனற தமிழரின் பண்பாட்டை பறை சாற்றினார். ஆனால் கீதை மாயா சிருஷ்டம் சதுர்வருணம் என்று சாதீயத்தை வளரக்கிறது. இந்த சாதீய கருத்து (Sattanic verses) பார்பனவெறியரின் இடைச்செருகளாக இருக்கலாம். உள்ளோன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் ..பகுத்தறிவு திக்கெட்டும் பரவட்டும்
பார்ப்பனர் என்பது தமிழ் குடி. காலக் கணிதத்தை ஆய்ந்தவர், அவ்வாறு மிகப் பெரிய அறிஞர் கூட்டத்தை சேர்ந்தவராயினும் கற்ற அறிவியல் நுட்பங்களை மறந்தாலும் மீண்டும் படித்துக் கொள்ளலாம் ஆனால் பிறக்கும் போதிலிருந்து இருக்கக் கூடிய அற ஒழுக்க குண நலன்களாகிய நட்பு,தயை, கொடை போன்றவற்றில் குன்றிவிட்டால் அவன் வாழ்வே கெடும் என்ற வகையில் கூறியதின் உட்பொருள் கருப்பொருளை உணர்வதற்கு தமிழறிவும், பண்பாட்டியல், மொழியியல் வரலாற்றறிவும் வேண்டும்... அவ்வாறு தெளியாதவர் பல அறிவு கெட்ட உரையாசியர்கள் கூற்றை உண்மை என கருதி கருத்திடுவது அறியாமை. 9791713885
அறிவிழந்த உணர்ச்சி உளரல்😌
மிக்க நன்றி,அய்யா!
திருக்குறளைப் புரிந்துகொள்ள உதவுவதான பெயரில் தனது சமய வழிப் பட்ட பொருளையே பரிமேலழகர் பல்வேறு இடங்களிலும் புகுத்தியது வெளுத்து வரும் காலம் இது. “வள்ளுவரைப் புரிந்து கொள்ள பரிமேலழகர் வேண்டும்” என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை “தற்குறிப்பேற்ற அணி நலத்தைக் கச்சிதமாகப் பரியார் செய்து விட்டார்” என்பதும். இந்தத் திருப்பணி திருவள்ளுவ மாலையிலேயே தொடங்கிவிட்டது. பார்க்க எனது வலைப்பக்கம் - “திருவள்ளுவ மாலை என்னும் தில்லுமுல்லு மாலை” - எனும் எனது கட்டுரை இணைப்பு -https://valarumkavithai.blogspot.com/2022/01/blog-post_30.html இக்கட்டுரையை திரு கார்த்தி அவர்கள் இந்தத் தளத்தில் எடுத்துப் பயன்படுத்தினால் மகிழ்வேன்.
Post a Comment